ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று தொடர்ந் தேர்ச்சியாக நான் கூறி வருவதுண்டு. ஆனால், அதனை மறுத்து, பலர் என்னை விமர்சித்து வந்தனர். இன்று நான் எதனைக் கூறினேனோ அதுவே நடந்திருக்கிறது. அதாவது;
பெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள், சிறுபான்மை மக்களுக்கு சொந்தமான நிலங்களை, மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளின் அரசாங்கங்களும், திட்டமிட்ட வகையிலான பெரும்பான்மை இனக் குடியேற்றங்கள் மூலமும், பல்வேறு வகையான திணைக்களங்கள் மூலமும் ஆக்கிரமிப்பு செய்து வருவதனாலும் – அபிவிருத்தி விடயங்களில் சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதனாலும் – நிருவாக ரீதியிலான சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதனாலும் – மொழி ரீதியிலான தடைகளை எதிர்கொள்வதாலும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கென்று, பொத்துவில் சம்மாந்துறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய தனியான நிருவாக மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென கோரிக்கை முன் வைத்தார்.
இக்கோரிக்கை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழர்களினதும் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ள விடயமாகும். இது ஒன்றும் புதிய விடயமும் அல்ல. ஏலவே, வடக்கில் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு என மூன்று நிருவாக மாவட்டங்கள் இருக்கின்ற போதிலும், இம்மூன்று மாவட்டங்களையும் சேர்த்ததாக வன்னி மாவட்டம் என்ற பெயரில் தேர்தல் மாவட்டமும் அதற்கான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவதை நாம் அறிவோம். எனவே, இதுவொன்றும் பெரும் சர்ச்சைக்குரிய விடயமும் அல்ல.
மறுபுறம், முஸ்லிம்களைப் போன்ற மற்றுமொரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பல தமிழ் சகோதரர்கள் அரசாங்க அதிபர்களாக இருக்கின்ற போதிலும், ஒரு மாவட்டத்தில் கூட முஸ்லிம் அரசாங்க அதிபராக இல்லை. இலங்கையின் சனத்தொகையில் சுமார் பத்து வீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு ஆகக்குறைந்தது, இரண்டு அரசாங்க அதிபர் பதவிகளாவது வழங்கப்பட வேண்டும். ஆனால், மன்னாரில் அரசாங்க அதிபராக கடமையாற்றி, புலிகளால் கொல்லப்பட்ட மர்ஹூம் மக்பூல் அவர்களுக்குப் பின்னர், இதுவரை எந்தவொரு முஸ்லிமுக்கும் அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை, முதலாவது பெரும்பான்மையினராக வாழ்பவர்கள் முஸ்லிம்கள். இரண்டாவது சிங்கள மக்கள். மூன்றாவது தமிழ் மக்கள். இரண்டாவதாக வாழும் சிங்கள மக்களை சேர்ந்த ஒருவர் அரசாங்க அதிபராக இருக்கிறார். மூன்றாவது இடத்திலுள்ள தமிழ் மக்களைச் சேர்ந்த ஒருவர் உதவி அரசாங்க அதிபராக இருக்கிறார். முதலாவது பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு அரசாங்க அதிபருமில்லை – உதவி அரசாங்க அதிபருமில்லை.
இவ்வாறு, நியாயமாகப் பார்க்கப்போனால் இரண்டு அரசாங்க அதிபர் பதவிகள் கிடைக்க வேண்டிய முஸ்லிம் சமூகத்திற்கு, கரையோர மாவட்டம் அமையப் பெறுவதனூடாக ஒன்றாயினும் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், அது இன்று வரைக் கைக்கூடவில்லை.
இந்நிலையில் தான், தற்போது அரசாங்கமும், அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியும் பாராளுமன்றத்தில், கரையோர மாவட்டத்தை தர முடியாது என்று அறிவித்திருக்கிறார்கள். பிரதமர் கரையோர மாவட்டம் தருவதை மறுத்திருக்கும் அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ பிரபாகரனின் பிரிவினைக் கோரிக்கையாக வர்ணித்திருக்கிறார். சாதாரண நிர்வாக மாவட்ட விடயத்தினை, தமிழ் ஈழம் கேட்டு நிற்பதைப் போன்று வர்ணித்திருக்கிறார்.
இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றைத்தான். நீலமும் பச்சையும் என்று நிறங்கள் மாறினாலும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும், முஸ்லிம் விரோதக் கொள்கையில் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இன்னும் கூறப்போனால், இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவர்களை நம்பி நமக்கான தனித்துவ அரசியலை தூக்கி வீச நினைக்கும் எல்லோருக்கும், கரையோர மாவட்டத்துக்கு எதிரான இவர்களின் கருத்தொற்றுமை மிகத்தெளிவான அபாய மணியாகும்.