Breaking
Sun. Dec 22nd, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி (Denis Chaibi) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (13) கொழும்பில் இடம்பெற்றது.
 
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்குமிடையிலான நீண்டகால உறவு குறித்து மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் , இச்சந்திப்பின் போது நினைவுபடுத்தியதுடன், கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
 
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
 
’பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுடைய விடுதலை தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் அதிக அக்கறை செலுத்துகின்றது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, சிறையிலிருக்கின்ற தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலர், தமது கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக்கூட பொருளாதார வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். பொருளாதார ரீதியில் அவர்களது குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இதனால், அவர்களுக்கான நியாயம் கிடைப்பது கூட அரிதாகவுள்ளது.
 
எனவே, கடந்த காலங்களைப் போன்று ஐரோப்பிய ஒன்றியம், பாதிக்கப்பட்டுள்ள கைதிகளின் நலனுக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும்’ எனவும் அவர் வேண்டிக்கொண்டார்.
 
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட இன்னும் பல அறிஞர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள் என பலரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பதையும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.
 
இதன்போது, கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி,
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்பில், நீதியமைச்சின் ஊடாக, நீதிமன்றங்களின் திறனை அதிகரிக்கும் மூன்று வருட செயற்றிட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
அத்துடன், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைது தொடர்பிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி கேட்டறிந்துகொண்டார்.

Related Post