28 நாடுகளின் அரசியல், பொருளாதார கூட்டமைப்பாக ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது.
இந்த ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்ற சர்ச்சை அங்கு எழுந்தது. இதையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடிவு செய்தார். இந்த கருத்து வாக்கெடுப்பு வருகிற 23-ந் தேதி அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பிரசாரமும் நடைபெற்று வந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாகூட கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் வந்து, ‘ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இடம் பெறுவதற்கு ஆதரவாக கருத்து வாக்கெடுப்பில் மக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக இருப்பதால், இங்கிலாந்து உலக அளவில் இடம் பிடித்திருக்கிறது என்றும், தன்னை வலிமை வாய்ந்த நாடாக உருவாக்கி உள்ளது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கருத்து வாக்கெடுப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவந்த எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பாட்லே-ஸ்பென் தொகுதி பெண் எம்.பி., ஜோ காக்ஸ் (வயது 41), நேற்று முன்தினம் மதியம் தனது தொகுதியில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் மக்களை சந்தித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதன்பின்னர் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உடனடியாக அங்குள்ள லீட்ஸ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 52 வயதான டாமி மேர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜோ காக்ஸ் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருப்பது, இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ள லாரி கிளிண்டன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடும்போது, “ஜோ காக்சின் வாழ்வு, பாதியிலேயே பறிக்கப்பட்டு விட்டது கொடூரமானது, பயங்கரமானது. வெறுப்புணர்வுக்கும், வன்முறைக்கும் எதிராக இங்கிலாந்தும், அமெரிக்காவும் இணைந்து நிற்க வேண்டியது முக்கியம்” என கூறினார்.
2 குழந்தைகளின் தாயான ஜோ காக்ஸ் மரணம் குறித்து அவரது கணவர் பிரெண்டன் காக்ஸ் கூறுகையில், “ஒரு சிறப்பான உலகத்தை காண்பதற்காக ஜோ போராடி வந்தார்” என குறிப்பிட்டார்.
ஜோ காக்ஸ் மறைவுக்கு ஐரோப்பா முழுவதும் இருந்து இரங்கல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
அவரது மரணத்தால், ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து நடந்து வந்த பிரசாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே திட்டமிட்டபடி வரும் 23-ந் தேதி அங்கு கருத்து வாக்கெடுப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.