ஐ.எஸ் (இஸ்லாமிய அரசு) சுக்கு எதிராக போராடுவதற்கான மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
தமது பதில் நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக, எகிப்து, ஜோர்தான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஒன்றை சவுதி அரேபியா கூட்டியுள்ளது.
சிரியாவின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று எகிப்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
இராக்கிய பிரச்சினையில் முக்கிய பங்காற்றி வருகின்ற இரானின் வெளியுறவு அமைச்சரை பாக்தாதில் இராக்கின் புதிய பிரதமர் ஹைதர் அல் அபாதி சந்திக்கிறார்.
இதனிடையே, சிரியாவின் வடக்கு மாகாணமான ரக்காவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி விமானப்படைத் தளத்தையும் ஐ.எஸ் போராளிகள் கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
தாப்கா விமானப்படைத் தளம் முழுமையாக ஐ.எஸ் போராளிகளின் வசம் வீழ்ந்துவிட்டதாகவும் விமானப்படைவீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பிரிட்டனிலிருந்து இயங்கும் சிரியாவின் மனித உரிமை நிலவரத்தைக் கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.
விமானப்படைத் தளம் வீழ்ந்துவிட்டதை சிரியாவின் அரச செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அரசபடைகள் வெற்றிகரமாக மீள ஒருங்கிணைந்துவருவதாகவும் அந்த செய்தி கூறியுள்ளது.
இதனிடையே, தரா மாகாணத்தில் அரச படைகள் மறைந்திருந்து நடத்திய அதிரடித் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் அரச செய்தி நிறுவனமும் கண்காணிப்புக் குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.