ஐக்கிய தேசியக் கட்சியின் பரப்புரை இயந்திரம் “சுவிச் ஓவ்” செய்யப்பட்டுள்ளது. அதன் சாவியைத் தேடி எடுக்கவே மைத்திரிபால சிறிசேனவுக்குப் பல மாதங்களாகும் என்று தெரிவித்தார், அரசு பக்கம் தாவிய ஐ.தே.க முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் முதலாவது பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் சர்வதேச சக்திகளே உள்ளன. அவரின் வெற்றி இலங்கைக்கு அல்ல சர்வதேசத்துக்கே தேவையான ஒன்று. ஆனாலும் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியால் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியவில்லை. அந்தளவுக்குக் கட்சி வங்குரோத்தடைந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்த தற்போது மரணவீடாகியுள்ளது என அங்கு சேவையாற்றுகின்றவர்கள் கூறுகின்றனர்.
ஐ.தே.கவின் தேசியத் தலைவர் சுவரில் சாத்தப்பட்டுள்ளார். அவரால் இனிமேல் தலைதூக்க முடியாது. ஏனெனில் அனைத்து முடிவுகளையும் சந்திரிகா குமாரதுங்கவே எடுக்கின்றார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறவேண்டும் என்பது இலங்கையர்களின் நோக்கம் அல்ல. அது சர்வதேசத்தினரின் நோக்கமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுயம ஆகியவற்றுடன் மைத்திரி தனித்தனியாக இணக்கப்பாட்டு ஒப்பந்தம் செய்துள்ளார். வடக்குக்குப் பொலிஸ், காணி உள்ளிட்ட நிர்வாக அதிகாரம் வேண்டும் என்று கூட்டமைப்பு கேட்கின்றது.
இவ்வாறான நிலையில், கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இவற்றை அவதானித்துப் பார்க்கும்போது பொது எதிரணியின் பயணம் சிறந்தொன்றாக எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் அரசில் இணைய முடிவெடுத்தேன்.
ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெறுவது உறுதியாகும். மூன்றாவது முறை அல்ல, நான்காவது முறையும் அவருக்கு சவால்விட எவரும் இல்லை- என்றார்.