– இர்ஷாத் றஹ்மத்துல்லா –
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுச் சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார்.
நீ்ண்ட காலமாக இயங்காமல் உள்ள இந்த ஒட்டுத் தொழிற்சாலையினை மீள இயங்க வைக்கும் வகையில் தேவையான புனரமைப்பு மற்றும் இயந்திர கொள்வனவுகளுக்காக 20 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,இரண்டாம் கட்ட நிதியாக 100 மில்லியன் ரூபாய்களை அடுத்த ஆண்டில் ஒதுக்கீடு செய்வதாகவும்,இதன் மூலம் இப்பிரதேசத்தில் உள்ள பல குடும்பங்கள் தொழில் வாய்ப்புக்களை பெறும் என்றும் அமைச்சர் இதன் போது கூறினார்.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் இந்த ஓட்டுத் தொழிற்சாலை செரமிக் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
யுத்தத்தினால் இந்த தொழிற்சாலை அழிக்கப்பட்டதனால் இதனது உற்பத்தி தடை பட்டதுடன்,இயந்திரங்களும் பழுதடைந்து சேதமாகியுள்ளதையும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இந்த விஜயத்தின் போது பார்வையிட்டார்.
இந்த தொழிற்சாலையின் புனரமைப்பு பணிகள் மிகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு,நாட்டுக்கு தேவையான செரமிக் உற்பத்திகளை வழங்க தாம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது விஜயத்தின் போது குறிப்பிட்டார்.