பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் படத்தை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் காட்சிப்படுத்துமாறு, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் இவ்வாறு செய்ய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பெயரில் மேர்வின் சில்வாவால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என கூற முடியாது என இதன்போது குறிப்பிட்ட அவர், அந்த உரிமை தனக்கே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனும் தூய வார்த்தையை கொள்ளையர்களும் திருடர்களும் பயன்படுத்த இடமளிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எதிரணியினரின் செயற்பாடுகளை மேற்கொள்ள தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை நிறுவியதாகவும் இது கட்சி அல்ல அமைப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கடந்த ஆட்சியின் போது, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் தேவைக்கு அமைய பெரும்பாலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேர்வின் சில்வா இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.