Breaking
Fri. Sep 20th, 2024

புத்தளம் வாழ் முஸ்லிம்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமைப்படுவதன் மூலம் புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொள்ள முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் மொஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல் ஏற்பாட்டில் பழைய குத்பா பள்ளி கலாசாரமண்டபத்தில் இடம்பெற்ற மீலாத் விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது,சிறு சிறு வேறுபாடுகள் காரணமாக புத்தளம் மக்கள் இன்று பிரிந்து செயல்படுகின்றனர்.

என்னதான் கட்சிக்கொள்கைகள் இருந்தாலும் சமூகம் என்று வரும்போது நாம் ஒன்றுபடுவதன் மூலமே நமது இலட்சியத்தை அடைய முடியும். புத்தளம் வாழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்று எட்டாக் கனியாக மாறியுள்ளது. இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காகவே நாம் புத்தளத்துக்கு தேசிய பட்டியலில் நவவி ஹாஜியாரை பாராளுமன்ற உறுப்பினராக்கினோம். புத்தளம் மக்களின் தேவைகளையும் குறைபாடுகளையும் நிவர்த்திப்பதறகு நவவி எம்.பி பல்வேறு செயற்பாடுகளை அவர் மேற்கொள்கின்றார். அவர் ஓர் அரசியல் அணுபவஸ்தர் அவருக்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பின் மூலமே உங்களது பிரச்சினைகளைத்தீர்த்துக்கொள்ள முடியும்.

கடந்த தேர்தலில் வன்னியில் இரண்டு முஸ்லிம் எம்.பிக்களையும், அம்பாறையில் மூன்று முஸ்லிம் எம்.பிக்களையும், மட்டக்களப்பில் இரண்டு முஸ்லிம் எம்.பிக்களையும் ,அனுராதபுரத்தில் ஒரு முஸ்லிம் எம்.பியையும் நமது சமூகம் பெற்றுக்கொள்ள முடியும் என்றால் புத்தளத்தில் நமது சமூகம் தோற்றுப்போனதற்கு என்ன காரணம்.? உங்கள் மன சாட்சியைத்தொட்டு கேளுங்கள். அரசியல் வாதிகள் அடுத்தவரை எப்படி வீழ்த்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்தால் சமூகத்திற்கு நன்மை கிடைக்காது.

வட புல முஸ்லிம் அகதிகளுக்கு வாழ்வளித்த பூமி புத்தளம்.அதனை அகதிகளாகிய நாம. என்றுமே மறக்கமாட்டோம்.

நமது முஸ்லிம் சமூகம் கல்வியிலே மிகவும் பின்னடைவு கண்டுள்ளது பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் மாணவராகிய நீங்கள் கல்வியிலே கவனம் செலுத்த வேண்டும் கல்விதான் தமது சமூகத்தை உயர்நிலைக்கு கொண்டுசெல்லும்.

இன்று நீங்கள் மிகச்சிறந்த முறையில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டினீர்கள்,மார்க்க கல்வியிலும், உலக கல்வியிலும் நீங்கள் கவனம் செலுத்தினால் முழுமையான பயனை பெற முடியும் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூறினார். இந்நிகழ்வில் நவவி எம்.பி , மாகாண சபை உறுப்பினர்கள் நியாஸ், தாஹிர் பள்ளி நிர்வாக சபைத்தலைவர் பி.எம்.ஏ ஜனாப் உட்பட பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

By

Related Post