ஒருமித்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தக் கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சென்னையில் நேற்று புதன்கிழமை ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான விஜயமொன்றை கடந்த 21ஆம் திகதி மேற்கொண்டிருந்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை புதுடில்லியில் சந்தித்த பின் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கான விஜயத்தின் போது, தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதிநிதிகளை நேற்று புதன்கிழமை சந்தித்து பேசியிருந்தனர். இந்தச் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய இரா.சம்பந்தன், இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது பேசிய விவகாரங்கள் குறித்து விளக்கினார். 13வது சட்டத்திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்; அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று கோரியதாகவும், இந்தச் சந்திப்பு திருப்தி அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைகளைப் பொறுத்தவரை, ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வையே தாங்களும் உலக நாடுகளும் இந்தியாவும் விரும்புவதாகவும், தமிழர்கள் வசிக்கும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பைப் பொறுத்தவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்களிடம் கூறியபடி செயற்படவில்லை. ஆனாலும், வடக்கு- கிழக்கு மாகாணங்கள் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.