சீனாவில் 1979-முதல் பின்பற்றப்பட்டு வந்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை கொள்கை முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. அந்நாட்டில் ‘ஒரு தம்பதி, ஒரு குழந்தை’ என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே சில மாகாணங்கள் இந்த கொள்கையை தளர்த்தி உள்ளன. இந்த கொள்கை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள். ஆரோக்கியமான, நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சிக்கு சீரான குழந்தை பிறப்பு வீதம் அவசியம் என அவர்கள் கூறி வந்தார்கள்.
அரசின் கொள்கை காரணமாக சுமார் 400 மில்லியன் குழந்தைகளின் பிறப்பு தடுக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது சீன மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் முதியோர்கள். மேலும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருகிறது. இதனால் ஒரு குழந்தை கட்டுப்பாட்டை ரத்து செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தம்பதிகள் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.