Breaking
Mon. Dec 23rd, 2024
  • சுஐப் எம் காசிம்

அரிசிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலையில் ஆக்குவதற்கு மேற்கொண்ட சதியை முறியடிக்கும் வகையிலேயே அரிசிக்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 20 மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.unnamed (9)

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட வரட்சியை காரணம் காட்டி அரிசிக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதனால் தான் வெளிநாடுகளில் இருந்து அவசரமாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு இடமளித்தோம். இறக்குமதியாளர்களின் கோரிக்கைக்கேற்ப தீர்வை வரியையும் குறைத்தோம்.

2.5 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்த போதும் இற்றை வரை 86 ஆயிரம் மெற்றிக் தொன்னே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மாதமொன்றுக்கு நுகர்வோரின் அரிசிப் பாவனையைக் கணக்கிட்டே அமைச்சரவை அந்த அனுமதியை வழங்கியது. இறக்குமதி அரிசிக்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டது.

உள்ளூர் நெல் உற்பத்தியாளர்கள் தமக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்ததனால் ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழு கூடி உள்ளூர் அரிசிக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் தான் ஒரே வகையான பொருளுக்கு இரண்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டது.

சந்தையில் அரிசியைப் பதுக்கி வைத்து நுகர்வோருக்கு விலையக் கூட்டி விற்றதனால் தான் அரசாங்கம் நிர்ணய விலையை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்வதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் அவர்கள் தாங்கள் நினைத்த மாத்திரத்தில் நடக்க முடியாது. இறக்குமதியாளர்கள் முறைகேடுகளை மேற்கொண்டால் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் களத்தில் நிற்கின்றனர்.

அதே போன்று வியாபாரிகளும் நிர்ணய விலையை விட அதிகமாகவோ அல்லது பாவனைக்குதவாத அரிசியையோ விற்பனை செய்தால் அவர்களுக்கும் கடுமையான தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் இன்னொரு குழு இயங்கி வருகின்றது.

இதை விட எந்த முறைகேடுகள் நடந்தாலும் 1977என்ற நுகர்வோர் அதிகார சபையின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைத் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகவியலாளர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு உதவுவது கடனாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இறக்குமதி அரிசியில் இரசாயனக்கலவை கலக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனரே என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேட்ட போது,

அவ்வாறு ஏதும் நடைபெற்றால் ஊடகவியலாளர்கள் எங்களுக்கு உதவ வேண்டுமேயொழிய ஆதாரபூர்வமற்ற செய்திகளை பரப்பி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது தார்மீகமல்ல என அமைச்சர் வேண்டினார்.

கடந்த வாரம் புறக்கோட்டை அரிசிச்சந்தைக்கு நான் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். ஊடகவியலாளர்களும் என்னுடன் வந்திருந்தனர்.

அரிசி வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், வியாபாரிகள் சங்கம் ஆகியோருடன் பேசிய போது, போதிய அளவு அரிசி கையிலிருப்பில் இருப்பதாக அவர்கள் கூறி எனக்கு காண்பித்தனர்.அரிசிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லையென ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

இன்று எமக்குக் கிடைத்த தகவலின் படி சுமார் 4 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி கையிலிருப்பில் உள்ளது. மொத்த வியாபாரிகள் ஐந்து ரூபா அல்லது ஆறு ரூபா குறைத்தே சந்தைக்கு அரிசியை விநியோகிக்கின்றனர். எந்தத் தட்டுப்பாடும் இல்லாத போதும் அரிசி விலை குறையவில்லையெனக் கூறுவது அரசின் மீது வீண் பழி சுமத்துவதற்கே. இவர்கள் குறித்து அரசுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அத்துடன் இனி வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நிரந்தரமான இருப்பைக் கொண்டவாறான (Buffer Stock) ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி 1 இலட்சம் மெற்றிக் தொன் வரையில் களஞ்சியப்படுத்துவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அலோசனை வழங்கியுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் திணைக்களப்பணிப்பாளர் ரங்கன் கலசூரிய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன, கூட்டுறவு மொத்த விற்பனைத் நிலையத் தலைவர் ரிஸ்வான் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.unnamed (8)

 

 

 

 

 

Related Post