புதிய அரசியலமைப்பினை 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றால் போல் தயாரிக்க உள்ளோம். இதன்போது மக்களின் கருத்துக்களுக்கே பெரும் முக்கியத்துவம் அளித்து செயற்படுவோம். நான் ஒரு இலங்கையன். இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு எனக்கு இடமளியுங்கள். ஒற்றையாட்சிக்கு முரணான அரசியலமைப்பை உருவாக்கமாட்டோம். மக்களை குழப் பும் வகையில் வீணான எதிர்ப்புகளை உடனடியாக கைவிடுமாறு கோருகின்றேன். உலக வரலாற் றில் முதல் முறையாக இலங்கையிலேயே சமூக வலைத்தளங்களின் ஊடாக யோசனை பெறப்பட்டு அரசியலமைப்பு தயாரிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான பிரேரணை தொடர்பில் திருத்தங்கள் இருப்பினும் சமர்ப்பிக்க முடியும். அதனை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம். எனினும் அரசியலமைப்பு நிர்ணய சபைக்குட்பட்டதாக குறித்த யோசனைகள் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசியலமைப்பு தொடர் பில் நேற்று அலரி மாளிகையில் ஊடகவியலாளர்கள் முன்னிலை யில் விசேட உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் அதியுச்ச அதிகாரங்களின் பிரதான உரிமையாளர்கள் பொது மக்களாவர். ஆகவே மக்களின் உரிமைகளுக்காகவே அரசியலமைப்பு தயாரிக்கப்படுகின்றது. ஒழுக்கவியலுக்கு உட்பட்ட வகையில் புதிய அரசியலமைப்பினை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். மக்களுக்கான அரசியலமைப்பினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம். இதன்பின்னர் மக்களின் கருத்துக்களை வினவும் நோக்குடன், அரசியலமைப்பினை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு நாட்டு மக்களின் கருத்துக்களும் ஆதரவும் மிகவும் அவசியமாகும்.
புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் போது முழு பாராளுமன்றத்தினதும் ஒத்துழைப்பினை நாம் எதிர்பார்க்கின்றோம். இதனை அடிப்படையாக கொண்டே முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றியமைக்க உள்ளோம். எனினும் முழு பாராளுமன்றத்தினையும் அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணியில் ஈடுப்படுத்தும் திட்டத்திற்கு எதிரணியினர் பெரும் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர்.
அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு 225 எம்.பி. க்களினதும் பங்களிப்பு அவசியமில்லை. மாறாக 25 அல்லது 30 பேர்களினது அல்லது பாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படும் நான்கு கட்சிகளினது யோசனைகள் மாத்திரம் போதுமானது என்று கூறுவதில் எமக்கு பிரச்சினை கிடையாது. அரசியலமைப்பில் எதிரணியினரது யோசனைகளும் உள்ளடக்கப்பட வேண்டுமாயின் வீண் கூச்சல் இடாது அமைதியாக இருக்க வேண்டும். நாம் அனைத்து பாராளுமன்ற பிரதிநிதிகளின் ஒத்துழைப்பினையும் எதிர்ப்பார்கின்றோம். அவ்வாறாயின் தேவையற்ற முறையில் எதிர்ப்புகள் வெ ளியிடுவதனை எதிரணியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்களையும் எமது வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளவே நாம் முற்படுகின்றோம்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து கட்டவே மக்களின் ஆணையை கோரினோம். இதன்படி தேர்தலின் பின்னர் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த்தச்சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு திட்டமிட்ட போதிலும் நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அனைத்து அதிகாரங்களையும் நீக்குவதாயின் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதன்பிரகாரமே 19 ஆவது திருத்ததை நிறைவேற்றினோம்.
இந்நிலையில் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு, புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் காலமாகிய பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்காக மாதுலுவாவே சோபித தேரரின் ஆலோசனையின் பிரகாரம் முழு பாராளுமன்றத்தையும் இதற்காக முழுமையாக ஈடு படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது இலங்கையின் வரலாற்றை நாம் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். சோல்பரி ஆணைக்குழுவினால் அரசியலமைப்பினை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அரச சபையில் அனைவரினதும் ஆலோசனைகளையும் பெறப்பட்டே அரச மந்திரிகள் சபை உருவாக்கப்பட்டது.
அதேபோன்று 1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு தயாரிக்கப்படும் போது முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாநாயக்க அரசியலமைப்பு பேரவையை கொண்டு அதன் பணிகளை கொண்டு சென்றார். இதன்போது அனைத்து கட்சிகளினதும் ஆலோசனையும் கோரப்பட்டன. எனினும் இதன்போது எம்மால் முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் நிராகரிக்கப்பட்டன. அந்த விடயத்தில் எமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் கிடையாது.
1978 ஆம் ஆண்டின் போது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 6 இல் 5 பெரும்பான்மையை பெற்று ஆளும் கட்சியில் அமர்ந்தது. தமிழர் விடுதலை கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இதன்போது எதிர்க்கட்சி தலைவராக அமர்தலிங்கம் பதவிவகித்திருந்தார்.
ஆகவே அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு முழு பாராளுமன்றத்தையும் ஈடுபடுத்த நாம் திட்டமிட்ட போதிலும் எமது வேலைத்திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் அன்று இணக்கம் தெரிவிக்கவில்லை. தனிநாட்டை அமைப்பதற்கே எமக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்றும் ஆகையால் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பூரண எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் அன்று எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் கூறினார். ஆகையால் அரசியலமைப்பினை உருவாக்கவதற்காக சம்பிரதாயப்பூர்வ வழிமுறையான தெரிவுக்குழு செயல்முறையின் ஊடாக அரசியலமைப்பினை தயாரித்தோம்.
இதன்போது அரசியல் யாப்பிற்கு விரோதமான முறையில் ஏதாவது நிறைவேற்றுவதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கமையவே பாராளுமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டியேற்பட்டது. இந்த அரசியலமைப்பு ஜனநாயக முறைமையின் கீழ் தயாரிக்கப்பட்டாலும் பல்வேறு பிரச்சினைகள் இதன் மூலமாக ஏற்பட்டது.
ஆனாலம் எம்மைப் பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு அனைத்து கட்சிகளினதும் ஆதரவினையும் நாம் கோரியுள்ளோம். இந்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையையும் , விருப்பு வாக்கு முறைமையும் நீக்குவதற்கு விசேட அமைச்சரவை பத்திரத்தை நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார். புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகள் தொடர்பில் அனைத்து அரசியல்க் கட்சிகளுடனும் ஆறு தடவைகள் நானே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
இதன்பிரகாரம் அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவினை நிறுவினோம். நாட்டு மக்கள் அனைவரினதும் கருத்துக்களை வினவுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். புதிய அரசியலமைப்பின் போது பொதுமக்களினது கருத்துகளுக்கு பெருமளவில் முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான பிரேரணையின் ஊடாக புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான படிமுறைக்கே பாராளுமன்றத்தின் அனுமதி கோரவுள்ளோம்.
இதேவேளை அரசியமைப்பு நிர்ணய சபை அரசியலமைப்பிற்கு விரோதமான முறையில் நிறுவப்படவுள்ளதாக எதிரணியின குற்றம் சுமத்துகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்தாகும். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 74 ஆவது ஷரத்தின் பிரகாரமே அரசியலமைப்பு பேரவையை நிறுவியுள்ளோம். இதன்படி பாராளுமன்றத்திற்கான செயற்பாடுகளை விரிவுப்படுத்துவதாயின் விசேட பிரேரணை மூலமாக அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கமைய அரசியலமைப்பு நிர்யண சபையை நிறுவும் தீர்மானத்திற்கு நாம் வந்துள்ளோம்.
அத்துடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவினை அமைப்பதற்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் அனுமதியளிக்கப்படவில்லை. எனினும் அரசியலமைப்பின் 74 ஆவது உறுப்புரையின் பிரகாரமே தெரிவுக்குழு முறைமையினை கொண்டு வந்தோம். ஆகவே நிலையியல் கட்டளையினால் குறிப்பிடாத தெரிவுக்குழுவினை 74 ஆவது உறுப்புரையின் கீழ் கொண்டு வரமுடியுமாயின், ஏன் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு நிர்ணய சபையாக அங்கீகரிக்க முடியாது. தெரிவு குழு முறைமை சரியாயின் அரசியலமைப்பு நிர்ணய சபையும் சரியானதேயாகும்.
அரசியலமைப்பு நிர்ணய சபை தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஒன்பது திருத்தங்களை முன்வைத்துள்ளனர். திருத்தங்களை முன்வைப்பதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. எனினும் குறித்த திருத்தங்கள் அனைத்தும் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சியினரினதும் யோசனைகளை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.
ஆகவே அரசியலமைப்பு நிர்ணய சபை தொடர்பில் பாரராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான செயல்முறையாகும். இது அரசியலமைப்பு அல்ல. இதன்பிரகாரம் அரசியலமைப்பு நிர்ணய சபை தொடர்பிலான பிரேரணை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம். இதன்பின்னர் மக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள உள்ளோம். சிறிய அறைக்குள் முடங்கி கிடந்து அரசியலமைப்பினை உருவாக்க என்னால் முடியாது.
இம்முறை உலகில் எந்தவொரு நாட்டிலும் முன்னெடுக்கப்படாத வகையில், சமூக வளையத்தஙகளின் ஊடாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். இதனூடாக அரசியலமைப்பின் தயாரிக்கும் போது இளைஞர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன். இந்த நாட்டை பொறுப்பேற்க உள்ளவர்கள் தற்போதைய இளைஞர்களாகும். அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.
புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் போது நாட்டை பிளவுபடுத்த முனைய போவதில்லை. ஒற்றையாட்சிக்கு உட்பட்டே அரசியலமைப்பினை தயாரிப்போம். நான் ஒரு இலங்கையராகும். இந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றினைத்து தேசத்தை ஐக்கியப்படுத்துவற்கு எனக்கு அனைவரும் இடமளிக்க வேண்டும். நான் நாட்டை பிளவுப்படுத்துவற்கு ஒருபோதும் விடமாட்டேன்.
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக சர்வதிகாரம் மேலோங்க செய்யப்பட்டது. ஆனால் நாம் அடுத்த முப்பது வருடங்களுக்கு நாட்டை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வரவே முனைகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் வீணான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம். எமது வேலைத்திட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பினை நல்க வேண்டும். வெறுமனே குறுகிய சிந்தனைகளுக்கு வீதியிலறங்கி போராடுபவர்களை அரசாங்கம் கண்டுக் கொள்ளாது. அரசியலமைப்புக்கு எதிராக ஊடகங்களில் பிரதானமானவராக முன்னிலைப்படுத்தப்படுபவர் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் என்பது நகைப்புக்குரியதாக மாறியுள்ளது. ஊடகஙகளுக்கு வேறு எவரும் கிடைக்கவில்லையா என்றார்.
இந்நிலையில் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றால் போல் அரசியலமைப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆகவே புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக மக்கள் தங்களுடைய கருத்துக்களை மின்னஞ்சல் , தொலைநகல், முகநூல்களினூடாக முன்வைக்க முடியும். தற்போதைக்கு வயோதிப நிலையிலுள்ளவர்களின் கருத்துக்களை வினவுவதற்காகவே வீடு வீடாக சென்று கருத்துக்களை கோருவதற்கு விசேட குழு நிறுவப்பட்டுள்ளது.
எனவே புதிய அரசியலமைப்பிற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என்றார்.