– ARA.Fareel- –
நாட்டின் சில பகுதிகளில் பள்ளிவாசல்களில் ரமழான் மாத சமய வழிபாடுகள் ஒலிபெருக்கிகள் மூலம் அதிகளவு சப்தத்துடன் நடாத்தப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பள்ளிவாசல்களுக்கு அருகில் பல பௌத்த பன்சலைகள் இருக்கும் பிரதேசங்களிலும் இரவு நேர ரமழான் வழிபாடுகள் இவ்வாறு நடாத்தப்படுவது பிரச்சினைகளுக்கு வழிகோலுவதாக அமையும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளின் சப்தம் பள்ளிவாசல்களுக்குள்ளே மாத்திரம் கேட்கும் வகையில் குறைத்துக் கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் அது இன உறவுகளுக்குப் பாதகமாக அமையலாம் என உலமா சபை பள்ளிவாசல் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் கருத்துத் தெரிவிக்கையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ரமழான் மாதம் ஆரம்பமாவதற்கு முன்பே பள்ளிவாசல்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளின் சப்தம் அருகில் வாழும் மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் அமையக் கூடாதெனவும் ஏனைய இனத்தவர்களது உணர்வுகளுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளது.
என்றாலும் சில பள்ளிவாசல்களில் இரவு நேர ரமழான் வழிபாடுகள் அதிகளவு சப்தத்துடன் நடாத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஒரு பள்ளிவாசலைச் சூழ 7 பௌத்த பன்சலைகள் இருப்பதாகவும் அங்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அதிக சப்தத்துடன் சமய வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது.
ஒரு பிரதேசத்தில் பல பள்ளிவாசல்கள் இருக்கும் போது ஒரு பள்ளிவாசலில் தீக்கும் வேறொன்றில் தொழுகையும் மற்றொன்றில் பயானும் என்று ஒரே நேரத்தில் நடாத்தப்படுவதும் ஒலிபெருக்கிகளின் சப்தம் கூடுதலாக இருப்பதும் அப்பிரதேச மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்குகிறது.
எமது அமல்கள் ஏனைய சமூகத்தினரைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் பல சவால்கள் எழுந்துள்ள இக்காலகட்டத்தில் நாம் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
எனவே பள்ளிவாசல் நிர்வாகங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை அவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.