சர்வதேச ஒலிம்பிக் குழு ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை குறிக்கும் முகமாக உலகளாவிய ரீதியில் ஜூலை 23ஆம் திகதி ஒலிம்பிக் தின ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையில் காலி நகரில் நேற்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டதுடன் வரைதல் போட்டி, ஒலிம்பிக் தின ஓட்டம் என்பன நடைபெற்றன.
சர்வதேச ஒலிம்பிக் குழு 1894இல் ஜூன் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஒலிம்பிக் தினம் பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் நவீன ஒலிம்பிக் அமைப்பின் பிறப்பைக் கொண்டாடுவதும் இதன் நோக்கமாகும்.
காலி சமனல மைதானத்திலிருந்து ஒலிம்பிக் தின ஓட்டத்தை பிரேஸில் தூதுவர் எலிஸபெத் சொஃபி மார்ஸெல்லா டி பொஸ்கோ பல்சா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழா பிரேஸிலில் (ரியோ டி ஜெனெய்ரோ) நடைபெறுவதால் ஒலிம்பிக் தின ஓட்டத்தை இலங்கைக்கான அந் நாட்டுத் தூதுவர் ஆரம்பித்து வைத்தது மிகவும் பொருத்தமாகும்.
ஒலிம்பிக் தின ஓட்டத்தில் பங்குபற்றிய சகலருக்கும் சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, உப தலைவர்கள் ஆகியோர் உட்பட ஒலிம்பிக் குழு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.