-Muhajireen Buhary-
ஒலுவில் பிரதேசம் கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை அரசாங்கத்தினதும் அரசியல்வாதிகளினதும் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் வெள்ளிக்கிழமை (11) ஒலுவிலில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளன.
ஒலுவிலுள்ள பள்ளிவாயல்களின் நிருவாக சபைகள், சமூக சேவை அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போன்றன ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ள இவ்வார்ப்பாட்டப் பேரணி, ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பி.ப. 1.15 மணியளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஒலுவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலிலிருந்து ஆரம்பமாகி கடலரிப்பினால்
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வரை இவ்வார்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரவிக்கின்றனர்.
ஒலுவில் துறைமுக நிர்மாணிப்புக் காரணமாக பெரும் சேதங்களுக்குள்ளாகி
அழிவடைந்துவரும் ஒலுவில் கிராமத்தினதும் அங்குள்ள மக்களினதும் அவலங்களையும் அழிவுகளையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இவ் ஆர்ப்பாட்டப் பேரணியும் விழிப்புணர்வு ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலரிப்பினால் பாதிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தைப்
பாதுகாப்பது உட்பட சொத்துக்கள் மற்றும் வளங்களின் அழிவை நிரந்தரமாகத்
தடுக்கும் வகையில் சம்மந்தப்பட்டவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தல், எதிர்காலத்தில் கடலரிப்பு ஏற்படாமலிருப்பதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளல், பாதிக்கப்பட்டள்ள மக்களின் சொத்து இழப்பிற்கு நஷ்டயீட்டை வழங்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்க சம்மந்தப்பட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்களை உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.