எம்.ரீ.எம்.பாரிஸ்
சபை உறுப்பினர்களினால் பிராத்திய உள்ளுராட்சி ஆணையாளருக்கு அனுப்ப பட்டுள்ள கடிதப்பிரதி இத்துடன் அனுப்பபட்டுள்ளது
கடந்த ஓக்டோபர் 30.2014ந் திகதி மு.ப. 10.00 மணியளவில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 43வது பொதுச் சபைக் கூட்டம் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் ஏற்பாடாகியிருந்த நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வருகை குறைவாக காணப்பட்டது.
பிரதி தவிசாளர் ஏ.எம். நௌபர் அவர்களும்,உறுப்பினர் ஐ.ரீ. அமீஸ்டீன் அவர்களுமே வருகை தந்திருந்தனர் ஏனைய உறுப்பினர்கள் வருகை தராமையால்; பொதுச் சபைக் கூட்டம் அடுத்த நாள் ஓக்டோபர் 31. 2014ந் திகதி ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பின்னர், கூட்டத்திற்கு வருகை தராத ஏனைய 06 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு சபைத் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்கள் மீது குற்றச்சாட்டினை முன் வைத்து பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர், திருகோணமலை என முகவரியிட்டு பொதுச் சபைக் கூட்டத்தை பகிஷ்கரிப்புச் செய்ததாக அறிவித்திருந்தனர்.
அக்கடிதத்தில் நிதி மோசடி, தன்னிச்சையாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றமை, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வகை மாற்றம் செய்து விரும்பியவாறு செலவிடுகின்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தவிசாளர் மீது சுமர்த்தப்பட்டிருத்தது.
இவ்விடயம் தொடர்பாக தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டு இருத்தார் அவ் அறிக்கையில்
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் 43வது பொதுச் சபைக் கூட்டம் பிரதேச சபை உறுப்பினர்களால் நியாயமான காரணங்களின்றி பகிஷ்கரிக்கப்பட்டதுடன் என் மீது போலியான குற்றசாட்டுக்களையும் சுமத்தி இருத்தனர். இக்குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக மறுக்கின்றேன்.
இக்குற்றச்சாட்டுகளே கடந்த வரவு செலவுத்திட்ட வாசிப்பு இடம்;பெற்ற போது அதனை தோற்கடிப்பதற்காக சுட்டிக்காட்டப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகும். அப்போது வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து நின்ற உப தவிசாளர் மற்றும் மேற்படி பெயர் குறிப்பிட்டுள்ள உறுப்பினரும் இக்கடிதத்தில் கையொப்பமிடவில்லை, கூட்டத்திற்கும் சமூகமளித்திருந்தனர்.
சபையின் கொள்வனவு உட்பட ஏனைய நிதி நடவடிக்கைகள் சம்பந்தமான விடயங்களுக்குப் பொறுப்பாக சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொடுப்பனவு செய்யப்பட்ட விபரங்களும் மாதாந்தம் நடைபெறும் பொதுச் சபைக் கூட்டத்தில் சபைக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்டு வருவதுடன், நிதிக் கையாள்கை தொடர்பான சபையில் சகல ஆவணங்களும் உள்ளன. இதனை பார்வையிடுவதற்கும் மக்களுக்கும் அதிகாரமுண்டு. நிதி மோசடி தொடர்பாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களைக் கொண்டே நிரூபிக்க வேண்டுமே தவிர ஒரு வரியில் சொல்லிவிட்டு மக்களை திசை திருப்ப முனைவது பொருத்தமானதல்ல. தன்னிச்சையாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதென்ற மற்றுமொரு குற்றச்சாட்டும் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தை பொறுத்தவரையில், சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது முன்மொழிவுகளை சபை அமர்வுகளின் போது சபையில் சமர்ப்பித்து சபையின் ஏகமனதான தீர்மானத்திற்கிணங்கவே அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். இதற்கு ஆதாரமாக ஒவ்வொரு சபை அமர்வுகளினது கூட்டத் தீர்மானங்களும், முன்மொழிவுகளின் விபரங்களும் பிரதேச சபையில் உள்ளன. இக்குற்றச்சாட்டானது, அடுத்தடுத்து வருகின்ற பொதுச் சபைக் கூட்டங்களில் பேசி தீர்த்துக் கொள்ளப்பட வேண்டியவை. வெறுமனே, சந்தர்ப்பம் பார்த்து தமது அரசியல் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்கும், தனிப்பட்ட குரோதங்களை தீர்த்துக் கொள்வதற்கும் இவ்வாறான முன்னெடுப்புகளை செய்வது எவ்வகையிலும் பொருத்தமில்லாத, துணிகரமற்ற செயலாகவே கருதுகின்றேன்.
உறுப்பினர்களின் கௌரவத்தையும், அரசியல் இருப்பையும் தக்க வைத்து பாதுகாப்பது மக்கள் வழங்கிய ஆதரவிற்கேற்ப ஒவ்வொருவரும் செயற்படும் விதத்தை பொறுத்தது. மக்களுக்கு நல்ல வகையில் அர்ப்பணிப்போடு சேவையாற்றி செயற்பட்டிருந்தால் எதிர்பார்க்கும் எல்லாம் இறைவனின் அருளாள் தானாகவே கிடைக்கும்.
இப்பிரதேசத்தின் தவிசாளர் என்ற வகையில், இவ்ஆட்சிக் காலப் பகுதியின் இறுதிக் காலப் பகுதியில் உள்ளோம். சபை கலைக்கப்படுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. மக்களுக்குரிய பணிகளை எனது சக்திக்கேற்ப இறைவனின் உதவியுடன் சிறப்பாக செய்து வருகின்றேன், செய்ய உள்ளேன். விமர்சனங்களும், தோல்விகளும் கண்டு ஒதுங்கி மக்களுக்குரிய பணிகளை ஆற்றுவதில் பின்னிற்க மாட்டேன். கடந்த சபையின் ஆட்சிக் காலப்பகுதியின் பிரதேச சபை உறுப்பினராகவும், இறுதி ஆறு மாதங்களில் தவிசாளர் பதவியையும் நான் வகித்த போது மக்களுக்கு சேவையாற்றியதை கருத்திற் கொண்டே மக்கள் என்னை மீண்டும் தெரிவு செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி சுய அரசியல் இலாபம் சம்பாதிக்கவும், எதிர்வரும் காலங்களில் தத்தமது அரசியல் இருப்புக்களை தக்க வைப்பதற்கும் எடுக்கும் முயற்சியே இது. யாரும் சொல்லி மக்களை தெளிவுபடுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை, மக்கள் தெளிவாக உள்ளனர்.
இந்நியாயமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களுக்கு தெரியப்படுத்தி, திணைக்கள விசாரணைக் குழுவொன்றை உடனடியாக நியமித்து சபையின் நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆராய்ந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.