– முஸ்தபா முர்ஸிதீன், ஶ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகம்-
ஒரு பாடசாலைக்கு, அதன் வெற்றிக்கு பழைய மாணவர் சங்கம் என்பது இன்றியமையாத ஒன்று. இன்று இலங்கையிலும் சரி உலகிலும் சரி மேலோங்கி நிற்கின்ற பாடசாலைகளின் பல்வேறு தேவைகள்; பௌதீக, மனித வளம் சார்ந்தவை, அப்பாடசாலைகளின் பழைய மாணவர்களினாலே பூர்த்தி செய்யப்படுகின்றன. இது இவ்வாறிருக்க எமது மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்திலே பெயர் பதித்து நிற்கின்ற மட்/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)க்கு ஒரு பலம் வாய்ந்த பழைய மாணவர் சங்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் இப்பாடசாலை பல்வேறு துறை சார்ந்தவர்களை உருவாக்கியுள்ளது.
பல பாடசாலைகளின் வெற்றிக்கே பழைய மணவர் சங்கங்கள் காரணமாக இருக்கும் இக்காலகட்டத்தில், வெற்றிப்பாதையில் பயணிக்கும் இப்பாடசாலையை தட்டிக் கொடுக்க ஒரு பழைய மாணவர் சங்கம் இல்லை என்பது வேதனைக்குறியது. சுமார் நூற்றாண்டு கால வரலாற்றை கொண்ட இப்பாடசாலை ஏறத்தாழ 20,000 மாணவர்களை இச்சமூகத்திற்கு பிரசவித்துள்ளது. அவர்களுள் இப்பாடசாலை சார்ந்து அக்கறை உடையோர் எத்தனை பேர் என்பது கேள்விக்குறியே. பல்வேரு பகுதிகளில் இருந்தும் இப்பாடசாலையை நாடி வந்து கல்வி கற்போர் ஒருபுறமிருக்க இப்பிரதேசத்தில் உள்ளவர்களாவது இணைந்து இப்பாடசாலையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதை இட்டு இப்பாடசாலையின் பழைய மாணவர் என்று மார் தட்டிக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலை பற்றியும், அப்பாடசாலையின் பழைய மாணவர் அமைப்புக்கள் பற்றியும் பேசுகிறோம்; விமர்சிக்கிறோம். எம்மை ஈன்றெடுத்த இப்பாடசாலைக்காக நாம் என்ன பங்களிப்பை செய்தோம்? 2017ல் நூற்றாண்டு விழாவை எதிர் பார்த்திருக்கும் இப்பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தின் தேவை காலத்தின் கட்டாயமானது. எனவேதான் இப்பாடசாலை சார்ந்து அக்கறையுடைய பழையமாணவர்களே, இப்பாடசாலையின் நலன் விரும்பிகளே அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்த்து, இப்பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தை பலப்படுத்தி, இப்பாடசாலையை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல அணிதிரள்வோம். இன்ஸா அல்லாஹ்.