– எம்.ஐ.அப்துல் நஸார் -விடிவெள்ளி
புனித கஃபாவுக்கு நேராக நாளை வெள்ளிக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாண்டின் இரண்டாவதும் இறுதியானதுமான சந்தர்ப்பமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று புனித கஃபாவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக ஜித்தாவிலுள்ள வானியல் சங்கம் தெரிவித்தள்ளது.
இது லுஹர் தொழுகைக்கான அதான் இடம் பெற்றதன் பின்னர் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.27 இற்கு நிகழவுள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் மஜீட் அபூ ஸாஹிர் தெரிவித்தார்.
அதிகாலை முதல் மாலை வரை மத்திய பகுதியினூடாகவே சூரியன் பயணிக்கும். நிழல் மறையும் தருணத்தில் புனித கஃபாவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும். கடகக் கோட்டிலிருந்து புவி மத்திய ரேகையினை நோக்கிய சூரியனின் பயணத்தின்போதே இது நிகழ்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வானியல் நிலைமை மூலம் மக்காவில் இருந்து தொலைவிலுள்ள அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளும் அதேபோன்று குறித்த நேரத்தில் அடிவானில் சூரியன் தென்படும் நாடுகளும் கிப்லாவின் திசையினை மிகச் சரியாகத் தீர்மானித்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிப்லாவின் திசையினை நிர்ணயித்துக் கொள்வதற்கு நிலத்தின் மீது மரத் துண்டு ஒன்றை அல்லது பிளாஸ்ரிக் துண்டொன்றை நட்டு நிழலின் எதிர்த்திசையினை கிப்லாவின் திசையாக நிர்ணயித்துக்கொள்ள முடியும்
இவ்வருடத்தில் முதல் தடவையாக கடந்த மே மாதத்தின் ஆரம்பத்தில் சூரியன் கஃபாவுக்கு நேராக உச்சம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.