கடந்தகால தேர்தல் தொடர்பில் மீள்வாசிப்புச் செய்வதோடு, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பானதுமான மூன்றாவது சந்திப்புடனான கலந்துரையாடல் நேற்று (6) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்தாஹிர் தலைமையில், நிந்தவூரிலுள்ள எஸ்.எச்.அஹமட் (றாசீக் முதலாளி) காடனில் இடம்பெற்றது.
இதன்போது தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்கள் கூறுகையில்,
கடந்த உள்ளூராட்சி தேர்தல் நம் அனைவருக்குமாக இறைவன் தந்த நல்லதொரு பாடமாகவே நான் பார்க்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியாகிய அந்தக் கடைசி நிமிடங்களில், நமது எதிரணியினரின் மனநிலையை நன்றாகவே எம்மால் கண்டுகொள்ள முடிந்தது. இறைவனின் நாட்டம் இறுதி முடிவுகள் நமக்கு சாதகமானதாக அமைந்தது. அதற்காக முதற்கண் இறைவனுக்கும் அடுத்து உங்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
நாம் நிந்தவூர் பிரதேச சபையில் ஆட்சியமைத்ததிலிருந்து இன்றுவரை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உதவியுடன் பல கோடி ரூபாய்கள் பெருமதியான பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் நமது ஊருக்கு கொண்டுவரக் கூடியதாக இருந்தது, அதற்கான பூர்வாங்க வேலைகள் முடிந்த நிலையில் உள்ளன. இன்ஷாஅல்லாஹ் வெகுவிரைவில் அவற்றை உங்கள் கண்களூடாக பார்ப்பீர்கள் என்று கூறினார்.
மேலும் பேசுகையில், ஏழை மக்களுக்காக முதற்கட்டமாக சுமார் 15 வீடுகள், பாடசாலைகளைக்கான மூன்று மாடி கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள், பள்ளிவாசல், சிறுவர் பூங்கா, பொது மைதானம்,வாழ்வாதார உதவிகள் மற்றும் மயான பூமி புணரமைப்பு உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் இப்போது எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அவை அனைத்தும் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ மஜீத், எம்.எம்.சம்சூதீன், ஏ.அஸ்பர், வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் முகம்மது அலி ஜின்னா மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.எம்.ரியாஸ் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஏ.எம். முர்ஷித்-