அரசாங்கம் எந்த காரணத்தை அடிப்படையாக கொண்டும் நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பை காட்டிக்கொடுக்காது என்பதுடன் கலப்பு நீதிமன்றம் ஒன்று நாட்டிற்குள் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம உடுவில பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மக்கள் ஆணை வழங்கினர். அந்த மக்கள் ஆணையின் மூலம் நாங்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளோம்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு எதிராக செயற்பட்ட நாடுகள் அதனை கைவிட்டுள்ளன. அன்று பல நாடுகள் இலங்கையை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தயாராகின.
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அந்த நாடுகள் எமது நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வந்தன. எனினும் தற்போதைய தேசிய அரசாங்கம் அவற்றை முற்றாக தோற்கடித்துள்ளது.
ஜெனிவா நகரில் கடந்த சில வருடங்களாக இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் இம்முறை நாட்டில் செயற்பாட்டில் உள்ள நல்லாட்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நல்லாட்சிக்கு உலகத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தேசிய அரசாங்கம், அரசியல் , கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளதால், உலக நாடுகள், எமது நாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த காலத்தில் உலகின் புற்றுநோயாளி என சர்வதேசம் இலங்கையை அடையாளப்படுத்தியது எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.