கடந்த காலத்தை மறப்போம் மன்னிப்போம். எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்படுவோம் என யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு “வியாக்கியானம்” வழங்கிய ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார சர்வதேச விசாரணைக்கு எதிராக மிதவாதத் தமிழ்த் தலைவர்களை கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில், மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைத்து நெருக்கடிகளை கொடுத்தது.
இதற்கு காரணம் ஏகாதிபத்தியவாதிகளின் கொள்கைகளை ஏற்காது அமெரிக்காவுக்கு சவால் விடுத்ததாலேயே ஆகும்.இதன் காரணமாகவே மஹிந்தவின் ஆட்சியை சதி செய்து கவிழ்த்தனர். இன்று அமெரிக்காவின் தாளத்திற்கு ஆடும் ரணிலின் ஆட்சி உருவாகியுள்ளது.
எனவே தான் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உள்ளக விசாரணை என அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியுள்ளது. யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகள் தொடர்பாக இரண்டு தரப்பினரும் கடந்த காலத்தை மறப்போம்; மன்னிப்போம்.
எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவது என்பது தான் எனது நிலைப்பாடாகும். கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் விசேடமாக வடபகுதி தமிழ்த் மக்களை கடும்போக்கு தமிழ் தலைவர்களை தோல்வியடையச் செய்து நிராகரித்து விட்டார்கள்.
மிதவாதத் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், சித்தார்த்தன் போன்றவர்களை தமிழ் மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர். எனவே கடும்போக்கு தமிழ் தலைவர்களை தமிழ் மக்கள் நிராகரித்ததன் மூலம் சர்வதேச விசாரணைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.அத்தோடு சம்பந்தன் உள்ளக விசாரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளமையையும் வரவேற்கின்றோம் என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.