கடந்த கால திருடர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். இப்போது கைவசம் 35 “பைல்கள்” உள்ளது. இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
டுபாய் வங்கியில் 650 மில்லியன் டொலர்கள் யாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பலரின் வங்கிக் கணக்கு தகவல்கள் வெளியில்வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 9 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், திருடர்களை பற்றி பேசும் போது சபையில் பெரும்பாலானோர் மண்ணெண்ணை தாக்குதலுக்குள்ளான சாரப்பாம்புகளை போல் குழப்பமடைகின்றார்கள். ஏன் என்பது அவர்களது மனச்சாட்சிக்குத்தான் தெரியும். விரைவில் திருடர்கள் பிடிக்கப்படுவார்கள். ஆனால் சிறிது கால தாமதமாகும்.
ஏனென்றால் அனைத்து திருட்டுக்களும் சர்வதேசத் தரத்திலானவை. எனவே அவ்வாறான திருட்டுகளுக்கு தண்டனைகள் இல்லை. எனவே புதிய சட்டங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து இணக்கப்பாட்டு அரசை ஏற்படுத்தி நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுக்கின்றனர் என்றார்.