Breaking
Mon. Dec 23rd, 2024

கடல் மார்க்கமாக அகதிகள் தப்பிச்செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்திய கடலோர காவல்படையின் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

மேலும் அவர், கடலில் தப்பிச்செல்வது ஆபத்தான பயணம் என்பதை அகதிகள் உணர வேண்டும் எனவும், அகதிகள் தப்பிச் செல்வதை தடுக்க, முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல இலங்கை அகதிகள் முயன்றுள்ளதாக தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி நள்ளிரவு ஜனப்பச்சத்திரம், போலாட்சியம்மன் குளம் பகுதியில் நடந்த வாகனச் சோதனையில், இலங்கை அகதிகள் 28 பேரை பொலிஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கும்மிடிப்பூண்டி, புழல், வேலூர், பவானி சாகர் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் கியூ பிரிவு பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் அனைவரும் பழவேற்காட்டில் இருந்து கப்பல் மூலம் அவுஸ்திரேலியா நாட்டுக்கு தப்ப முயன்றதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட்டு ஆண்கள் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழவேற்காட்டில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டுக் காரணத்தை தெரிந்து கொண்டுதான் இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா நாட்டுக்கு அழைத்துச் செல்ல அப்பகுதியை இலங்கை அகதிகளை கப்பல் மூலம் அழைத்து செல்லும் முகவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

எனவே இனிவரும் நாள்களில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்கும் வகையில் பழவேற்காட்டில் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையம், கடலோரக் காவல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகநல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

By

Related Post