Breaking
Mon. Dec 23rd, 2024
அமெரிக்காவில் சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது, அதனை வெடிகுண்டு என ஆசிரியர்கள் தவறாகக் கருதியதால் கைதான முஸ்லிம் மாணவர் அகமது முகமதை அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்தார்.
டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் பயிலும் அகமது முகமது, சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்ட அவர், பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு கடிகாரத்தைச் செய்து, அதனை கடந்த மாதம் தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆசிரியரிடம் காட்டியுள்ளார்.
ஆனால் அது வெடிகுண்டு எனக் கருதி, ஆசிரியர்கள் பள்ளிக் காவலரை அழைத்தனர். அவரும், அகமதைக் கைது செய்து இரு கைகளுக்கும் விலங்கிட்டார்.
சக மாணவர்களிடையே அப்பாவிச் சிறுவன் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டது அமெரிக்கர்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அகமது முகமதுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அவரை வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வருமாறு அதிபர் ஒபாமா சுட்டுரை (டுவிட்டர்) வலைதளம் மூலம் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விண்வெளி அறிஞர்கள் விருந்தில் அகமது முகமது கலந்து கொண்டார்.

By

Related Post