மக்களுக்கு விநியோகிப்பதற்குரிய ஒரு தொகை கடிதங்களை உரியவர்களுக்கு விநியோகிக்காது பௌத்த விகாரை ஒன்றின் அலுமாரியில் மறைத்திருந்த தபால்காரர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி தபால் நிலையத்தில் பணியாற்றும் மதுரங்குளி மஹகும்புக்கடவல பிரதேசத்சைத் சேர்ந்த தபால்காரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
நேற்று திங்கட்கிழமை குறித்த சந்தேக நபராக தபால்காரர் மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஒரு தொகை கடிதங்களை எடுத்துக் கொண்டு வெளியேறிய பின்னர் அவற்றை பௌத்த விகாரை ஒன்றின் புத்தக அலுமாரியில் மறைத்து வைத்துள்ளதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றை அடுத்து முந்தல் பொலிஸார் குறித்த இடத்தினை முற்றுகையிட்டு சோதனை செய்துள்ளனர். இதன் போது அங்கிருந்து 333 கடிதங்களை பொலிஸார் மீட்டுள்ளதோடு குறித்த தபால்காரரையும் கைது செய்துள்ளனர்.
சந்கேதக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர் மதிக மதுபோதைக்கு அடிமையாகியுள்ளதாகவும், அவரிடம் கடந்த சனிக்கிழமையும், திங்கட்கிழமையும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக மதுரங்குளி தபால் நிலையத்திலிருந்து வழங்கப்பட்ட 333 கடிதங்களையே உரியவர்களுக்கு விநியோகிக்காது மறைத்து வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி தபால் நிலைய எல்லைக்குட்பட்ட பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த கடிதங்களே இவ்வாறு விநியோகிக்கப்படாது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முந்தல் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.