20ம் திகதி நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகளான றிசாத்தும், ஹிபுல்லாவும் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமான விடயங்களை நீக்குவதற்கு கடுமையாக போராடியுள்ளனர்.
நேற்று புதன்கிழமை காலை 8 மணிக்கு சபாநாயகருடன் முதற்சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.
இதையடுத்து அவர்கள் இரவு 9 மணிவரை பாராளுமன்றத்தில் இருந்து மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகங்கள் வந்துவிடலாகாது என்பதற்காக கடுமையாக முயன்றுள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணிக்கு இதுதொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த போதும் இரவு 8.30 மணிக்கே வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.
இவர்கள் இருவரினதும் பிடிவாதத்தை கண்ட ஆளும்கட்சி எம்.பி.க்கள் இவர்கள் இருவருடனும் கடுமையாக நடந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அமைச்சர் ராஐத்த சேனாரத்தினா உள்ளிட்ட சிலர் றிசாத்தையும், ஹிஸ்புல்லாவையும் தாக்க முயன்றதாகவும் அறியவருகிறது.
கடும் குரலில் இவர்களுக்கிடையில் வாக்குவாதமும் நடைபெற்றுள்ளது.
ஒரு கட்டத்தில் ஹிஸ்புல்லாவை நோக்கி தாங்கள் தந்த தேசியப் பட்டியலை பெற்றுக்கொண்டு சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக மாத்திரம் செயற்படுகிறீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இவற்றிக்கு அப்பால் பிரதமர் ரணில் உள்ளடங்கலாக பிரதான அமைச்சர்கள், மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு நல்கும்படி கடும் அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் அறியவருகிறது.
இவர்கள் இருவரினதும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் முயற்சியினால் பிரதான 4 விடயங்களை மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தில், உள்ளீர்ப்புச் செய்யமுடியுமாக இருந்துள்ளது.
பல்லின ஆசன அங்கத்தவர், எல்லை நிர்ணய ஆணைக்குழு மூலம் 4 மாதத்திற்குள் திர்வை எட்டுதல், பிரதமர் அடங்கலான 4 பேர் கொண்ட சிறப்புக் கமிட்டி மூலம் அநீதி இடம்பெறாதவாறு செயற்படுதல் மற்றும் கலப்பும், விகிதாசாரமும் கலந்த 50 க்கு 50 என்பதிலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமானது முஸ்லிம்களுக்கு பாதகம் இல்லையென்று சொல்லமுடியாவிட்டாலும் முஸ்லிம்களுக்கு ஏற்படவிருந்த பல பாதகங்களை குறைத்துள்ளதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் இணையம் ஒன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.