-முர்ஷித்-
நிந்தவூரை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காணச்செய்யும் நோக்கில், ஒவ்வொரு நிந்தவூர் மகனுக்கும் கட்சி பேதமின்றி நமது பிரதேச சபையின் சேவை சென்றடைய, நாம் அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்
நிந்தவூரின் வட்டாரங்களை மையப்படுத்தியதான அபிவிருத்தித் திட்டங்களை பரிந்துரைக்கும் வகையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடனான, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வட்டாரங்கள் வாரியான ஆலோசனை குழுக்களை அமைக்கும் நோக்கில், நிந்தவூர் 6 ஆம் வட்டாரமான நெல்லித்தீவு வட்டாரத்திற்கான முதலாவது கூட்டம் அண்மையில் (20) நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
நெல்லித்தீவு வட்டார நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே, தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், அவர் தெரிவிக்கையில்,
எம்மால் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே அமையும். அந்தவகையிலேயே இக்கூட்டம் கெளரவ உறுப்பினர் அஸ்பரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, ஏனைய வட்டாரங்களிலும் அதன் உறுப்பினர்கள் அல்லது வேட்பாளர்களால் ஆலோசனை கூட்டங்கள் கூட்டப்பட்டு, மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றே அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்த இருக்கின்றோம் என்றார்.
இக்கூட்டத்தில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்) கூட்டமைப்பு சார்பான உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு, தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.