கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் சம்பளங்கள் வங்கி ஊடாக மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கட்டாரில் தொழில்களில் ஈடுபட்டு வரும் அனைத்து இலங்கையர்களது சம்பளங்களும் வங்கியின் ஊடாக வழங்கப்பட உள்ளது.
வங்கியின் ஊடாக மட்டுமே சம்பளங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை அந்நாட்டு அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த போது, கட்டார் அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு சம்பளங்கள், வங்கியின் ஊடாக வழங்கப்பட உள்ளது.
கட்டாரின் தொழில் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் அப்துல்லா சாலிய அல் குலாபி இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சம்பளங்களை வங்கியின் ஊடாக வழங்குவதனால் சம்பள நிலுவைப் பிரச்சினைகளை தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தொழில் ஒப்பந்தம் தொடர்பிலும் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கட்டாரில் 145000 பேர் பணியாற்றி வருகின்ற போதிலும், தூதரக புள்ளி விபர ஆவணங்களில் 107000 என குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.