ஜப்பானின் கீழ்மட்ட மனித பாதுகாப்புத் திட்டத்திற்கான நன்கொடை உதவி வழங்கும் பொருட்டு வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசு 801,311 அமெரிக்க டொலர்களை (108 மில்லியன் ரூபா) வழங்கியுள்ளது.
நன்கொடை ஒப்பந்தம் ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகநும மற்றும் HALO Trust நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டமியன் ஒபிரைன் ஆகிய இருவரும் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவராலயத்தில் நேற்று கைச்சாத்திட்டனர். இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் திட்டம் HALO Trust நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. கண்ணிவெடியால் பாதிப்படைந்த பிரதேசங்களை பாதுகாப்பான பிரதேசமாக மாற்றி மக்களை தங்களது வாழ்வாதாரத்தை தொடர்வதற்கான இலங்கை அரசின் முயற்சியை மேற்குறித்த நிறுவனம் துரிதப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் மற்றும் அவ்வாறு திரும்பியவர்களின் விவசாயம் மற்றும் வேறு வாழ்வாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் போன்றவற்றை துரிதப்படுத்தும் பொருட்டு இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கு உதவும் முக்கிய நன்கொடை வழங்குனராக ஜப்பான் திகழ்கிறது.
தனது நன்கொடை உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசு இலங்கையின் வட கிழக்கு பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 2003ஆம் ஆண்டிலிருந்து 27.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
2003ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு மிக முக்கிய நன்கொடையாளராகத் திகழும் ஜப்பான் அரசு HALO Trust நிறுவனத்தை மிக நம்பிக்கை வாய்ந்த நிறுவனமாக அங்கீகரித்துள்ளது என அந் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டமியன் ஓபிரைன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இலக்கு 2020ஆம் ஆண்டளவில் இலங்கை கண்ணிவெடி தாக்கமற்ற நாடாக விளங்க வேண்டுமென்பதே இந்த நிதியுதவியின் நோக்கம் என குறிப்பிடப்படுகிறது. இவ் இலக்கை அடைவதற்கு ஜப்பான் ஏற்கனவே முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. எனினும் நீண்டகால நன்கொடை யாளர்கள் மற்றும் புதிய பங்குதாரர்களால் வழங்கப் படும் மேலதிக நிதியுதவி போன்றவற்றிலும் இது தங்கி யுள்ளது.