Breaking
Sun. Dec 22nd, 2024

அமைச்சர் என்ற முறையில் உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து நீக்குவேன். அதை விடுத்து வெறுமனே அமைச்சரவை வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் நல்லிணக்கத்துக்கும் ஒரு அமைச்சர் இருகின்றார் என்று காட்டும் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள தனது அமைச்சு அலுவலக பொறுப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை (08) முற்பகல் ஏற்றுக்கொண்ட வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

தடைகளை அடி மட்டத்தில் இருந்து நீக்குவேன். மேல் மட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை நமது அரசாங்கம் தமிழ்,முஸ்லிம் தலைமைகளிடம் பேசி தீர்க்கும். அங்கேயும் கட்சி தலைவர் என்ற முறையில் நான் இருப்பேன்.

தேசிய கலந்துரையாடல் என்பது தேசிய நல்லிணக்கத்துக்கு வழிகாட்டவேண்டும். இந்நாட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள, மலே மற்றும் பறங்கி இனத்தவர் மத்தியில், பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதத்தவர் மத்தியில் மெய்யான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். நல்லிணக்கத்துக்கு தடை இன, மத சமத்துவம் இன்மைகளாகும். சமத்துவம் இல்லாவிட்டால் எப்படி நல்லிணக்கம் ஏற்படமுடியும்? இது நான் எப்போதும் கேட்கும் கேள்வியாகும். இந்த இனவாத தடைகளை நான் அறிவேன். ஏனென்றால், இன்று நான் பொறுப்பு ஏற்றுள்ள இந்த அமைச்சரவை அமைச்சின் நோக்கங்கள் எனக்கு புதியவை அல்ல. இந்த நோக்கங்களுக்காக நான் தெருக்களின் இருந்து பத்து வருடங்களுக்கு அதிகமாக போராடியவன்.

1999 இல் ஆரம்பித்த என அரசியல் வாழ்வில் இன்றுதான் நான் முதன்முதலில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். இதையிட்டு எவரும் மனக்கிலேசம் அடைய தேவையில்லை. இதற்கு முன்னர் இரண்டு ஜனாதிபதிகளிடமிருந்து, அமைச்சு பதவியை ஏற்றுகொள்ளும்படி நான்கு முறை எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், நான் வரப்பிரசாதங்களுக்காக கொள்கைகளை விற்று அணிமாற தயாராகவில்லை. ஆகவேதான் அமைச்சராக இருக்கவில்லை.

இந்த ஆட்சி, எங்கள் ஆட்சி. தம்மை அரசர் என நினைத்துக்கொண்டு நாட்டை ஆண்ட அரச குடும்பம் ஒன்றை தோற்கடித்து எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையை நிலைநாட்டி நாம் உருவாக்கியுள்ள ஆட்சி இதுவாகும். இதற்காக நான் பெரும் பாடுபட்டுள்ளேன். நண்பர்கள் ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்க ஆகியோரை இழந்து நாங்கள், இந்த இடத்தை வந்தடைந்துள்ளோம். மக்கள் கண்காணிப்பு குழு, சுதந்திரத்துக்கான மேடை, எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம், காணாமல் போனோரின் குடும்பத்தவர் இயக்கங்கள் ஆகியவற்றை கடந்து இந்த இடத்தை அடைந்துள்ளோம்.

ஆகவே, எனக்கு இந்த அனுபவங்கள் புதியன அல்ல. கடந்த காலத்தில் செய்து வந்தவைகளை இனி நான் அதிகாரப்பூர்வமாக செய்வேன். இந்த நாட்டில் இனி இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதம், அரச மற்றும் அரசற்ற பயங்கரவாதம் என்று எதுவும் இருக்க முடியாது. ஆயுத போராட்டத்துக்கு அடித்தளமிடும் காரணிகளை நான் படிப்படியாக தேடி அழிப்பேன். இது எங்கள் அரசின் கொள்கை. இந்த அமைச்சில் இந்த கொள்கையின் அடைப்படையில்தான் காரியங்கள் நடைபெற வேண்டும். அதிகாரிகள் எவராவது இதற்கு இடையூறு செய்தால் அதை நான் சகித்துக்கொள்ளப் போவதில்லை.

உள்நாட்டில் நமது முன்னுரிமைகள் எதுவாக இருந்தாலும்இ உலகத்தின் பார்வையில் இலங்கையை பொறுத்தவரையில்இ தேசிய நல்லிணக்கம் என்பதுதான் முதலிடம் வகிக்கும் விஷயமாகும். நல்லிணக்கம் இல்லாவிட்டால்இ உலக ஒத்துழைப்புஇ ஆதாரங்கள் கிடைக்காது. இதனால் ஏனைய அனைத்து பொருளாதார அபிவிருத்திகளும் சரிந்துவிடும். எனவேஇ இந்த அமைச்சு மிகவும் முக்கியமான அமைச்சு. இதை என்னிடம் ஜனாதிபதியும் பிரதமரும் நம்பிக்கையுடன் ஒப்படைத்துள்ளார்கள்.  அந்த பொறுப்பை நான் ஆளுமையுடன் நிறைவேற்றுவேன். எனது அமைச்சு நோக்கங்களை நிறைவேற்ற இலங்கையின் நலனை நாடும் வெளிநாட்டு அரசுகளின் ஒத்துழைப்புகளை தேடி பெறுவேன்.

அரசுசாரா தொண்டர் அமைப்புகளை கடந்த காலத்தில் தேச விரோத சக்திகளாக மகிந்த தரப்பினர் காட்டினார்கள். அப்படி காட்டியவர்கள்தான் உண்மையான தேச விரோதிகள் என்று நாங்கள்  இன்று எடுத்து காட்டி விட்டோம். எனது அமைச்சின் பொறுப்பில்தான் அரசு சாரா தொண்டர் நிறுவன செயலகம் செயற்படும். சர்வமத சபையும் செயற்படும்.  அது தவிர அரசுகரும மொழிகள் திணைக்களம்இ அரசுகரும மொழிகள் ஆணைக்குழு, மொழிகள் பயிலகம் ஆகியவையும் எனது அமைச்சின் கீழ் செயற்படும். அரச நிறுவனங்களுக்கு தொழில்ரீதியான தமிழ் மொழி பணியாளர்களை நாம் நியமனம் செய்வோம். நாட்டில் நல்லிணக்கத்தை  ஏற்படுத்தும் இதுபோன்ற அவசியமான மேலதிக நிறுவனங்களை அமைப்பதற்கான அமைச்சரவை ஆவணத்தை தயாரித்து சமர்பிக்கும்படி பிரதமர் கோரியுள்ளார். அத்துடன்இ எனது அமைச்சின் கீழ் செயற்படும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை ஆவணம் ஒன்றையும் சமர்பிக்கும்படி பிரதமர் மேலும் என்னிடம் கூறியுள்ளார் என்றார்.

Related Post