15 வருட காலத்துக்கும் மேலாக கண்டி மாவட்டத்தின் உடபலாத, எகொட களுகமுவ பிரதேசத்தில் பாரிய பிரச்சனையாக இருந்து வந்த குப்பை அகற்றல் பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக மகாவலி கங்கைக்கு அருகாமையில் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணிகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் பஸால் ஏ காதர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட பிரதான காரியாலயத்தின் மக்கள் தொடர்பாடல் ஒருங்கினைப்பளர் சாபி ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் இது இடம்பெற்றது.
இந்த நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை (14) அன்று ஜும்மா தொழுகையை தொடர்ந்து மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில் இடம்பெற்ற கலந்துரையாடலில், எகொட களுகமுவ பிரதேசத்திலிருந்து அகற்றப்படும் குப்பைகளை குண்டசாலையில் அமைந்திருக்கும் கழிவு மேலான்மை அலகுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் முறையான குப்பை அகற்றல் சம்பந்தமாக மக்களிடையே விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் பஸால் ஏ காதர் மற்றும் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
(ன)