கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதை அமைக்கும் திட்டத்தில் உள்ள பகுதிகள் சிலவற்றில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் டீ.சீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன் காரணமாக அதிவேகப் பாதை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது அதிகம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த பாதையில் பொத்துஎரயிலிருந்து கலகெதர வரையான பகுதியிலே மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும், இந்தப் பகுதிகளில் உள்ள மலைகளை அகற்றுவதற்குப் பதிலாக சுரங்கப் பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வாரங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமைகளினால் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு சுமார் 400 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.