Breaking
Mon. Nov 25th, 2024

கண்டியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை…

கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று (07) மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை வீசி எரிக்கப்பட்டு வருவதற்கு மத்தியிலேயே, இந்த அமைச்சர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்த ஜனாதிபதியை சந்திப்பதற்காக அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக், மஸ்தான், நவவி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் கண்டிக்கு வருகை தந்திருந்தனர். கண்டியில் தங்கியிருந்த அமைச்சர்களான ரவூப் ஹகீம், பைசர் முஸ்தபா ஆகியோரும் இதில் பங்கேற்றனர். கொழும்பிலிருந்து விஷேட ஹெலிக்கொப்டர் மூலம் வந்திருந்த பௌத்த மதகுருமாரும், கண்டி அஸ்கிரிய மல்வத்த நாயக்க தேரர்களின் பிரதிநிதிகளும், உலமாக்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

கண்டியில் கட்டுக்கடங்காது சென்றுகொண்டிருக்கும் இனவாதிகளின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருமாறும், முஸ்லிம்கள் எந்த நேரமும் அச்சத்துடனும், கவலையுடனும் வாழ்வதாக முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினர்.

பாதுகாப்புப் படையினர் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த போதும், அவற்றை எல்லாம் மீறி இனவாதிகள், தொடர்ந்தும் நாசகார செயல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல்வாதிகள் வலியுறுத்திய போது, அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இதன்போது கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த தேரர்களும், முஸ்லிம்கள் மீது சிங்கள மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.

இந்த உயர்மட்டக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர், பாதிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றுக்கு விஜயம் செய்து, சேதமடைந்த இடங்களை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

கண்டியில் கட்டுகஸ்தோட்டை, உண்ணஸ்கிரிய, அக்குரணை 04 ஆம் கட்டை ஆகியவற்றில் இன்று இனவாதிகளால் எரிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள், கடைத்தொகுதிகள் மற்றும் வீடுகளையும் பார்வையிட்டனர்.

 

பாதிக்கப்பட்ட பிரதேசமான ஹாரிஸ்பத்துவ அங்குறுதெனவுக்கு அமைச்சர் குழு சென்ற போது, அங்கு பள்ளிவாசல் மற்றும் பல வீடுகள் எரிக்கப்பட்டு காணப்பட்டன.

அங்கு வசிக்கின்ற  189 முஸ்லிம் குடும்பங்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று மாலையிலிருந்து தாங்கள் உணவின்றி அவதிப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், இனவாதிகள் எந்த நேரத்திலும் தமது கிராமத்தை தாக்கக் கூடும் என அச்சம் வெளியிட்டனர். அமைச்சர் குழாம் அக்குரணைக்குச் சென்று அங்குள்ள பள்ளிவாசலில் மக்களை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்தனர். எந்த நேரத்திலும் தமது கிராமம் தாக்கப்படக் கூடும் என்ற நிலை இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள், படையினரின் செயற்பாடுகளில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் கூறினர்.

அநேகமான கண்டி மாவட்டத்தில் உள்ள எல்லா முஸ்லிம் கிராமங்களிலும் மக்கள் அச்சத்துடனையே வாழ்கின்றனர். இனவாதிகள் எந்த வழியால், எப்படி வருவார்கள் என்று தங்களுக்கு தெரியாத நிலையில், இரவு நேரங்களில் விழித்துக்கொண்டே தாம் இருப்பதாகக் கவலை வெளியிட்டனர்.

இனவாதிகள் எரித்துவிட்டுச் சென்ற கடைகளை அணைக்கும் பணியில், படையினர் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. அமைச்சர் குழாம் தற்போது பாதிக்கப்பட்ட ஏனைய இடங்களையும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post