உண்மையான செய்தி மூலங்களை தவிர்த்து, அவற்றினை ஒழுங்காக ஆராயாது ஊடகத்துறையின் ஒழுக்க கோவைகளை மீறி சில கண்மூடித்தனமான செய்தி வெளியீடுகளை வெளியிடுவதன் மூலம் சமூகத்தின் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புவதில் அண்மைக்காலமாக சில ஊடகங்களினால் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்குச் சான்றாக இதனை பிரதிபலிக்கும் வகையில் அண்மையில் வாராந்த பத்திரிகையொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்மைச் செய்தியாக இடம்பெற்ற ஒரு செய்தி வெளியீட்டைக் குறிப்பிடலாம். “போர் நீதிமன்றம் இன்னும் ஒன்பது மாதங்களில், வெளிநாட்டு நீதிபதிகள் வருகிறார்கள்” ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் குறிப்பு மூலம் இம் முதன்மைச் செய்தி வெளியிடப்பட்டது. இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. இது முழுக்க முழுக்க கற்பனைக் கதையாகவே எழுதப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை எழுதிய செய்தியாளர் யாரோ அவரது முழுமையான கற்பனைக் கதையாகவே இது உள்ளது. இவ்வாறான கற்பனை செய்திகளை பிரசுரிப்பதன் மூலம், இவை நாட்டு மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவது மட்டுமன்றி, நாட்டின் சமரச செயற்பாடுகளுக்கு இடையூறுகளையும் ஏற்படுத்த வல்லது.
ஒரு சிலரின் தனிப்பட்ட குறுகிய அரசியல் நன்மைகளுக்காகவும், குறுகிய நோக்கங்களுக்காகவும் வெகுசன ஊடகங்களை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி அதன் மூலம் அரசாங்க எதிர்ப்புச் சூழலை உருவாக்க சில ஊடக நிறுவனங்கள் தொழிற்பட்டு வருகின்றமையை இச்சம்பவத்தின் மூலம் வெளிப்படையாகக் காணக்கூடியதாகவுள்ளது. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக, மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் விகாராதிபதியும் தேரருமான ஒருவர் அங்கு அமைக்கப்பட்ட பெயர்ப்பலகையை அடித்து நொறுக்குவது பற்றிய செய்தியை குறிப்பிடலாம். இங்கு இச் செய்திக்கும் நாட்டின் ஜனாதிபதிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதில் ஜனாதிபதியால் செய்யக்கூடியதொன்றும் இல்லை. ஆனாலும் இவ்வாறான தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை ஊடகத்துறையின் அடிப்படைக் கொள்கைக்கு மாறாக பிரசுரிப்பது, நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் விமர்சனத்துக்குள்ளாக்குவது எந்தவொரு ஊடக பாரம்பரியத்தினை பேணும் சிறந்த ஊடக நிறுவனத்தின் அம்சமாக இருக்க முடியாது.
இவ்வாறாக பிழையாக போலியாக தயாரிக்கப்பட்ட செய்திகளை பிரசுரிப்பதன் மூலம் குறிப்பிட்ட சில ஊடகங்கள் அரசாங்கம் மற்றும் அரச தலைவர்கள் தொடர்பில் எதிரானதும் பிழையானதுமான பல தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதில் பங்காற்றி வருகிறது. அது மட்டுமன்றி ஊடக தர்மம், நாட்டில் தற்போது காணப்படுகின்ற தாராளவாத ஊடகத்துறை ஒழுங்கினையும் மீறும் செயற்பாடுகளாக அமைகின்றது.
தற்போது ஊடகத்துறையில் காணப்படுகின்ற உள்ளக பொறிமுறைகள், ஒழுக்க அமைப்புக்களினூடாக இவ்வாறான பிழையான செய்தி பிரசுரிப்புக்கள், பரப்பல்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் தேவையானதும் அவசியமாதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.