கனடாவில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
கனடாவின் வரலாற்றில் முதன் முதலாக அந் நாட்டின் மனிடோபா மாகாணத்தை சேர்ந்த திருநங்கையான காயெல் மகென்ஷி மாகாண நீதிபதியாக அதிகாரபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
மனிடோபா பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியைப் பயின்ற இவர் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கறிஞராக பட்டம் பெற்றார்.
சட்டத்துறையில் அவருக்கு இருந்த திறமையின் அடிப்படையில், அவரை மனிடோபா மாகாண நீதிபதியாக தெரிவு செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பரில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று வின்னிபெக் நகரில் நடந்த கூட்டத்தில் நீதிபதிகள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அதிகாரபூர்வமாக இவர் பதவியேற்றுள்ளார்.
இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள சில திருநங்கைகள் இது எங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக கொண்டாடுவதாக என்னிடம் உற்சாகமாக கூறினார்கள் என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் கொடுக்கப்பட்டுள்ள இந்த உயரிய பதவியையும், பொறுப்பையும் நேர்மையாகவும், சமூகத்திற்கு பாதுகாப்பு உண்டாக்கும் கடமையாக நினைத்து செயல்படுவேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கனடா வரலாற்றில் முதன் முதலாக நீதிபதியாக பதவியேற்றுள்ள காயெல்மகென்ஷிற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.