இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்
புல்மோட்டை கனியவள கூட்டுதாபனத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி நாட்டுக்கும்,பிரதேசத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் செயலுருவம் வழங்கவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
புல்மோட்டைக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் நன்மை கருதி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்ததன் பின்னர் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக பல நிறுவனங்களை எனது அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார்கள்.அந்த வகையில் இதனை கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் ஊழலற்ற நேர்மையான பணிகளை செய்துவருகின்றேன்.
அரச அதிகாரிகள் அதிகமாக கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதன்மை இடம் பெறுகின்றது.இந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.சிலர் அதனை செரியாக செய்கின்றார்களா என்பது தொடர்பிலும் பேசப்படுகின்றது.இந்த கூட்டுத்தாபனத்தை நம்பி 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன.எனவே இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு மட்டும் மட்டுப்பட்டு செயற்படாமல் பரந்த பார்வையினை கொண்டு செயற்பட வேண்டும் என கேட்கவிரும்புகின்றேன்.
கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலிய நாடு பேச்சுவார்த்தையினை நடத்தியுள்ளது.இது தொடர்பில் இங்கிருக்கின்ற அதிகாரிகளுடனும்,ஊழியர்களுடனும் கலந்துரையாடி நடவடிக்கையெடுக்கப்படும் என கூறிக் கொள்ளவிரும்புகின்றேன். என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
புல்மோட்டை பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்து ஊர் மக்களும்,மற்றும் கனிய மணல் ஊழியர்களும் அமைச்சரை வாகன பவணி மூலம் அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.