இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் முன்னைய காலத்தில் 20 க்கும் மேற்பட்ட கப்பல்களை தம்மகத்தே வைத்திருந்தது. ஆனால் தற்போது கப்பல் கூட்டுத்தாபனத்திடம் கப்பல்கள் எதுவும் இல்லை எனவும் அனைத்து கப்பல்களையும் கடந்த அரசாங்கம் விற்று விட்டது எனவும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
கப்பல் கூட்டுத்தாபனத்தின் 44 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு கொழும்பு துறைமுகத்தில் உள்ள island wisdom கப்பலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சஷீ தனதுங்க கூட்டுத்தாபனத்தின் வருட திட்டங்கள் “2016 – 2020” ஆண்டுகளுக்கான வருடத்திட்டங்கள் அடங்கிய புத்தகத்தினையும் அமைச்சரிடம் கையளித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்காலத்தில் போதுமான கப்பல்கள் இல்லாத காரணத்தினால் நிலக்கரிகளை மட்டும் பரிமாற்றம் செய்து வியாபாரம் செய்து வந்தோம். இதன் மூலம் 70 சதவீதமான இலாபத்தினை அடைந்துள்ளோம். அத்துடன் இக்கூட்டுத்தாபனம் புதிதாக இரண்டு கப்பல்களை வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றுள் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் அளவிலும் மற்றையது எதிர்வரும் ஆண்டிலும் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கப்பல்களும் நிலக்கரிகளை பரிமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும் நிலக்கரிகளை கப்பலில் இருந்து கொண்டு வந்து பெரிய கொள்கலன் ஊடாக நாடாளாவிய ரீதியில் பரிமாற்றத்தில் ஈடுபடுவதனால் கொழும்பில் பல பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசல்கள் மிகையாக ஏற்படுகின்றன. எனவே இதனையும் முடிந்தவரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஒருநாளில் 1000 கொள்கலன் பெட்டிகள் துறைமுகத்திலிருந்து வௌியே வருகின்றன. இதன் போது அவ்வாறே 1000 கொள்கலன் பெட்டிகள் துறைமுகத்திற்குள் செல்ல வேண்டும் . இதன் மூலம் 2000 கொள்கலன் வாகனங்ககள் வீதியில் நடமாடுவதால் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகின்றன. எனவே தான் இந்த போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க நாம் வாகனங்கள் மூலம் பரிமாற்றம் செய்வதனை தடுத்து நாட்டில் பிரதேசங்களுக்கிடையில் கப்பல் வசதிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ஊடகவியலாளர் மாநாட்டினை தொடர்ந்து கப்பல் கூட்டுத்தாபனத்தின் 44 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு கப்பலினை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது கப்பல் பற்றி கருத்து தெரிவித்த தலைமை மாலுமி கப்டன் நிக்கோலா இக்கப்பலானது 4250 கொள்ளளவினை கொண்டது. இக்கப்பல் பிரயாணமானது தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர், இந்தியா, கொழும்பு என பிரயாணித்து திரும்ப தாய்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். ஒரு முறை பிரயாணத்தினை மேற்கொண்டு அதனை முடிக்க சுமார் 64 நாட்கள் செலவழிப்பதாக கப்டன் மேலும் தெரிவித்தார். TKSJF