-ஊடகப்பிரிவு-
மத்திய நுவரகம் பலாத்த பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ கிராமத்தில் அமையப் பெற்றுள்ள அ/மனாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய நூலகத் திறப்பு விழாவும், பாடசாலை மைதானத்தை புனர் நிர்மாணம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (03) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் தொழிலதிபர் தாரிக் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பாடசாலை மைதானத்தின் விஸ்தரிப்பிற்காக அப்பிரதேசத்தை சேர்ந்த அலிக்கான், அப்துல்லாஹ் ஆகிய இருவர்கள் தங்களது சொந்த காணியில் இருந்து 1 1/2 ஏக்கர் காணியினை இப்பாடசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
பாடசாலை மைதானத்தின் விஸ்தரிப்பிற்காக காணிகளை வழங்கிய இருவரும் இஷாக் எம்.பியினால் கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன், இந்தப் பாடசாலையில் 2017 ஆம் ஆண்டு க.பொ.தா. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளும் கௌரவிகப்பட்டனர்.
இஷாக் ரஹ்மான் எம்.பி இங்கு உரையாற்றுகையில்,
அனுராதபுர மாவட்டத்திலே முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தாய்த்தமிழ் பாடசாலையாக இப்பாடசாலை விளங்குகிறது. இப்பாடசாலையின் விருத்திக்காய் நான் பாராளுமன்றிலும் ஓர் உரையை ஆற்றியிருந்தேன். எங்களது சமூகம் இன்று கல்வியிலே மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இனிமேலும் பின்னடைவதற்கு நாம் விட்டுவிடக்கூடாது. அதிலும் குறிப்பாக எனது மாவட்டமான அனுராதபுர மாவட்டத்தில் கல்வி மட்டம் வீழ்ச்சியடைவதற்கு நான் ஒருபோதும் விட மாட்டேன். நமது சமூகம் கல்வியில் முன்னேறுவதற்கு நான் பல முயற்சிகளை எடுத்து வருகின்றேன்.
என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் கல்விக்காகவும், நமது சமூகத்திற்காகவும் நான் செய்வேன் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும் பாடசாலை என்பது மாணவர்களுக்கு கல்வியறிவை போதிக்கும் ஓர் புனிதமான இடம். பாடசாலைக்குள் ஒருபோதும் அரசியலை நுழைக்க எந்தவொரு அரசியல்வாதிகளும் எத்தனிக்க கூடாது என்று குறிப்பிட்டார்.