Breaking
Mon. Dec 23rd, 2024

-சுஐப் எம் காசிம்

அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக தமது தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீண்டும் இன்று நிதியமைச்சர் ரவி கருனாநாயக்கா தலைமையில் நிதியமைச்சுக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்ட போது, கரும்பு உற்பத்தியாளர்களின் நலன்களுக்குக் குந்தகமாக கல்லோயா பிளான்டேசன் கம்பனி செயற்படுவதற்கு தாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் மீண்டும் வலியுறுத்தி பேசினர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தயாகமகேயும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், ஹிங்குரான சீனித்தொழிற்சாலையை தற்போது நிர்வகித்து வரும் கல்லோயா பிளான்டேசன் கம்பனியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் திறைசேரி உயர் அதிகாரிகள் ஆகியோரும் இவ்வுயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப்  ஹக்கீம் ஆகியோர் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையை கல்லோயா பிளான்டேசன் தொடர்ந்தும் இழுத்தடிப்பதைக் கைவிட்டு அவர்களுக்கு விமோசனமளிக்கக் கூடிய ஒரு முறைமையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

அமைச்சர் ரிஷாட் இங்கு கருத்து தெரிவித்த போது,

கல்லோயா பிளாண்டேசன் நிறுவனத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்கமுடியாதெனவும் இந்த நிறுவனம் கரும்பு உற்பத்தியாளர்களை நசுக்கி தாங்கள் மட்டும் பயன்பெறுவதைக் கைவிட்டு அவரகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் உற்பத்தியாளர்களுக்கு பாரிய வட்டி விகிதத்தில் கடனை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ள இந்த நிறுவனம் இந்தக் கடன் சுமையை குறைக்கும் வகையிலான அவசரத் தீர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.

சீனியின் கொள்வனவு விலையை அதிகரித்து கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இலாபமீட்டும் வகையிலான திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கருத்துப் பரிமாற்றப்பட்டது.

எதிர்வரும் புதன்கிழமை மீண்டுமொரு அமைச்சர்கள் மட்டதிலான கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்த நிதியமைச்சர் ரவி கருனாநாயக்கா எதிர்வரும் திங்கட்கிழமை கல்லோயா பிளாண்டேசன் நிறுவனம் தமது நடவடிக்கைகள் தொடர்பான இறுதியறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டுமென நிறுவன அதிகாரிகளிடம் பணித்தார்.

By

Related Post