Breaking
Mon. Dec 23rd, 2024

– நிஷவ்ஸ் –

கட்டம் கட்டமாய்
கரைகிறது வாழ்க்கை
சற்று சிந்தித்தால்
சத்தியம் புரியும்.
கருவாகி உருவாகி
கர்ப்பத்தில் சிசுவாகி
வெளியாகி வரும்போது
விடைபெறும் முதற்கட்டம்
புரண்டு முரண்டு
உருண்டு தவழ்ந்து
தாய்ப்பால் முடியும்
வாய்ப்போடு முடியும்
மழலையாய் வாழ்ந்த
குழந்தைப் பருவம்.
செல்லப் பிள்ளையாய்
தொல்லைகள் கொடுத்து
கள்ளமாய் சீனியை
அள்ளித் தின்று
துள்ளித் திரியும்
பிள்ளைப் பருவம்
ஐந்து வயதோடு
அடங்கத் தொடங்கும்.
வேலிக்கு வெளியேயும்
வேறுலகம் உள்ளதனை
காலம் காண்பிக்கும்
கால்களில் துடிப்பெடுக்கும்
ஏலான்னு அடம்பிடித்தும்
ஸ்கூலுக்கு செல்லுகின்ற
சிறுவர் எனும் பருவம்
சிதையத் தொடங்கும்
வாழ்க்கையில் பத்து
வயதாகும் போதினிலே
இருபது வயது வரை
எல்லோர்க்கும் புது உலகம்.
இது போன்று மற்றோர்க்கு
இருக்கவில்லை எனத் தோன்றும்
இத் தசாப்தம் பலருக்கும்
இனிமையாய் கழியும்
இருபதின் முடிவில்
இறங்கத் தொடங்கும்
இளமைத் துள்ளல்.
அடுத்த பத்து
தொடுக்கும் சவால்கள்
நிச வாழ்வு சவாலாய்
நேரே எழுந்து நிற்கும்.
கசக்கிப் பிழியும்
கற்றதற்கு தொழில் தேட.
திசைமாறும் சிலர் வாழ்வு
தேடுகின்ற துணைகளினால்.
அரைவாசி வாழ்வு
அத்துடன் விடைபெறும்
பிள்ளைகள் பிறக்கும்
பேராசை பெருகும்.
உள்ளது போதாதென
உலகம் ஏமாற்றும்.
பள்ளிகளை மறந்தேனும்
பாடு பட்டு பணந்தேடும்.
நாற்பது வரும் வரைக்கும்
நாயோட்டம் தொடரும்.
அத்தோடு விடைபெறும்
அரை குறை இளமை.
பின்னுள்ள பத்தில்
பெரிதாக திட்டம் வரும்
தன்னால் இயலாக் காலம்
முன்னால் வருவதினால்
சின்னதாக என்றாலும்
சேமிக்கத் தோன்றும்
என்றாலும் உள்ளத்தில்
இறை பக்தி உயிர் பெறும்
உறுப்புக்கள் ஒவ்வொன்றாய்
உற்சாகம் குறையும்
பொறுப்புக்கள் சிந்தனையால்
போகும் ஐம்பது வரை
அடுத்து வரும் பத்தில்
ஆன்மீகம் கூடும்
கடந்து வந்த வாழ்க்கையை
கணக்குப் பார்க்கும்
உடன் பிறந்த உறவுகள்
ஒவ்வொன்றாய்ப் பிரியும்.
கடன் வாங்கி மகளுக்கு
கல்யாணம் நடக்கும்.
ஓடி வந்த வாழ்க்கை
உட்காரத் தொடங்கும்.
ஆடிய சில ஆட்டம்
அறுபதில் அடங்கும்.
அறுபது தொடக்கம்
எழுபது வரைக்கும்
ஒரு வித அமைதி
உள்ளத்தில் இருக்கும்.
இருபதில் ஆடிய
இனிய நினைவுகள்
இருந்தால் போல
ஏக்கமாய் தோன்றும்.
ஒருபுறம் பேரன்
மறுபுறம் பேத்தி
அருமையும் அன்பும்
உரிமை கொண்டாடும்.
எழுபதின் தொடக்கம்
எழுவதும் தொழுவதும்
இழுபறியாகும்
இயலாமை தோன்றும்.
எண்பது தொண்ணூறு
என்பது இல்லாம்
அன்பினால் இறைவன்
அளித்த அருட் கொடை.
என்புகள் தளர்ந்து
இயலாமை வளரும்.
புரண்டு முரண்டு
உருண்டு தவழ்ந்து
திரும்பவும் பிள்ளையாய்
விரும்பாமல் வரலாம்.
இரும்பு போல் உறுதியாய்
இருப்பார் சிலபேர்.
இறப்பு என்பது
இரும்பையும் உருக்கும்.
எப்போது இறப்பு
யாரும் அறியார்.
கட்டம் கட்டமாய்
கரைகிறது வாழ்க்கை
சற்று சிந்தித்தால்
சத்தியம் புரியும்.

By

Related Post