தமிழர்களுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் காரணமாக கர்நாடகத்தில் பதட்டம் நீடிக்கிறது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தின. இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் சுப்ரீம் கோர்ட்டு, காவிரியில் இருந்து தமிழ் நாட்டுக்கு 20-ந்தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது கன்னட அமைப்பினரிடம் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.
பெங்களூர், மைசூர், மாண்டியா, ஹாசன், யாதகிரி, தாவணகெரே, விஜயபுரா, தார்வாட் உள்பட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன. இதையடுத்து பதற்றம் உருவானதால் பெங்களூர் உள்பட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
என்றாலும் கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கும்பல், கும்பலாக வந்து தாக்குதல்களில் ஈடுபட்டனர். பெங்களூர் பஸ் நிலையத்தில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்தவரின் உணவகம் அடித்து நொறுக்கப்பட்டது. போலீஸ்காரர்களால் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த இயலவில்லை.
பெங்களூரில் ராஜாஜி நகர், மைசூரு ரோடு, சேட்டி லைட், ஹெக்கன ஹள்ளி, கெங்கேரி, ராஜகோபால் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. தமிழக பதிவு எண் கொண்ட பஸ்கள், லாரிகள், வேன்கள், கார்களை பார்த்ததும் அடித்து உடைத்து தீவைத்து எரித்தனர். சாம்ராஜ் பேட், மைசூரு சாலை பகுதிகளில் தமிழர்களின் 4 லாரிகள், 3 கார்கள், 3 வேன்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
பெங்களூரு அவனஹள்ளியில் தனியார் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான 30 லாரிகளை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் தீவைத்து எரித்தனர். அது போல பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள துவாரகநாத் நகர் பகுதியில் கே.பி.என். நிறுவனத்துக்கு சொந்தமான 56 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கன்னட அமைப்பை சேர்ந்த சுமார் 200 பேர் திரண்டு வந்து அந்த பஸ்களுக்கு தீவைத்தனர்.
இதில் அந்த பஸ்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. வன்முறையாளர்களின் வெறியாட்டத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் சுமார் 200 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. தமிழர்களையும் குறி வைத்து தாக்கினார்கள்.
நேற்று மதியம் தொடங்கிய வன்முறை மாலை வரை நீடித்தது. அதன்பிறகும் வன்முறையாளர்கள் ஆயுதங்களுடன் சுற்றியதால் பெங்களூரில் ராஜகோபால்நகர், பேட்ராயனபுரா, கெங்கேரி, விஜயநகர், காமாட்சி பாளையம், மாகடி ரோடு, ராஜாஜி நகர், கே.பி.அக்ர ஹாரா, ராஜராஜேஸ்வரி நகர், நந்தினி லே-அவுட், ஞானபாரதி, சந்திரா லே-அவுட், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி நகர், ஆர்.எம்.சி. யார்டு, பீனியா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு பெங்களூர் போலீஸ் கமிஷனர் மேகரிக் மற்ற உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழர்கள் வாழும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
இதற்கிடையே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள 16 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யாராவது வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலவரக்காரர்களை கண்டதும் சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை (புதன்கிழமை) மாலை வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டவப்புரா, மாண்டியா, மைசூரு பகுதிகளிலும் சில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் 4 அணைப் பகுதிகளிலும் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு உடனடியாக 10 கம்பெனி ராணுவத்தை பெங்களூருக்கு அனுப்பியது. அந்த 10 கம்பெனி ராணுவ வீரர்களும் உடனடியாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது பெங்களூரில் கர்நாடக மாநில ரிசர்வ் போலீசார், நகர ஆயுதப்படை போலீசார், அதிரடிப்படை போலீசார், விரைவு அதிரடிப்படையினர், சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட பல்வேறு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் துணை நிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே துணை நிலை ராணுவ வீரர்களின் 10 கம்பெனி படை பெங்களூரில் உள்ளது. மொத்தம் 20 கம்பெனி மத்திய படை வீரர்கள் பெங்களூரில் முக்கிய பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால் இன்று கன்னட அமைப்பினர் பெரிய அளவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடவில்லை. சில இடங்களில் அவர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள்.
வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன் காரணமாக மக்களிடம் பதட்டம் நீடித்தது.
வன்முறையால் தமிழ் நாடு-கர்நாடகா இடையே இன்றும் வாகனப் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. இதனால் இரு மாநில மக்களும் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.