Breaking
Sun. Dec 22nd, 2024

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில்குலபாயே ராசிதீன்களின்” ஆட்சியின் பின் வந்த உமையாக்களின் ஆட்சியில் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத், மக்களின் அங்கீகாரம் பெறாத, ஒழுக்கங்கெட்ட மன்னனாக இருந்ததால், பெருமானார் (ஸல்) அவர்களின் பேரன் குசைன்  (ரழி) அவர்கள் யஷீதிற்கு பையத் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து விட்டார்கள் . குசைனின் அங்கீகாரம் இல்லையென்றால் மக்களின் அங்கீகாரம் கிடைக்காமல் போய், அது மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அஞ்சியதால் குசைனை எப்படியாவது அடக்கிப்பிடிக்க முயன்றபோது, ஈராக் நாட்டின் யுபிரடீஸ்-டைகிரீஸ் நதிக்கரையில்கர்பலாஎன்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையே  “கர்பலா“  யுத்தமாகும் .

இந்த யுத்தம் இஸ்லாமிய புது வருடத்தில் முஹர்ரம் மாதத்தில்ஆஷுராதினத்தில் பிறை 10ல் நடைபெற்றது. இந்த யுத்த களத்தில் ரசூலுல்லாஹ்வின் பேத்தி,அதாவது ஹுசைன் (ரழி) அவர்களின் சகோதரி  பீபிஜெயினப் நிகழ்த்திய வீர உரை உலகின் போர்களங்களிலேயே நிகழ்த்தப்பட்ட உரைகளில் மிகச்சிறந்தாக கருதப்படுவதால் அதனை இங்கு பதிவு செய்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.

தியாகத்தின் உண்மை உருவத்தைக்கான உங்களை கர்பலாவுக்கு அழைத்துச்செல்ல விரும்புகிறேன். கர்பலாவின் வீரப்பரப்புரையைக் கேளுங்கள். கி.பி.680  ஒக்டோபர்  மாதத்தில் ஒருநாள்…….

சரித்திரத்தை உற்று நோக்கினால் – இமாம் ஹூஸைன் அவர்கள், “ஓர் உன்னத இலட்சியத்துக்கு உயிர் கொடுத்து உலக சாதனையை ஏற்படுத்தினார்”, என்று எல்லா சரித்திர ஆசிரியர்களும்  பாராட்டுகின்றனர். இதுவரை சரித்திரத்தில் காணமுடியாத, சோகத்தில் விளைந்த, ஒரு தியாக காவியமென்று, பின்வரும் சரித்திர ஆசிரியர்களான DR.சைமன் நொக்லே, அபூ மக்னாஸ், ஸ்மித், ஜெப்ரிடெய்லர், லோர்ட் (LORD) டெனிசன் , சரோஜினி நாயுடு, DR.இக்பால், DR.ராஜேந்திர பிரஸாத், ஜவஹர்லால் நேரு, DR.ஜாகிர் ஹ¬ஸைன், கிப்பன், பன்டித் பிரநாத் பிரசாத், பேராசிரியர் ஹிட்டி,இப்னு கல்தூன், சாஸ்திரி, டிக்கன் , தோமஸ் கார்லைன், வெனிஸ், சேர்ச்சில், இந்திரா காந்தி, சேர்.ஜோன் குரூப்,  பேராசிரியர் புரோகள்மன், அல்லாமா யூசுப் அலி போன்ற, நமக்கு தெரிந்த ஒரு சில பெரிய மனிதர்களின் பாராட்டுதலைக் கேட்டு, அம்மாபெரும் தியாகத்தைச் செய்த அம்மக்களை நினைவு கூறாமல் இருக்க முடியாது.

மேலும், பல்கலைக்கழகங்களில், மிக உயர்ந்த ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள், இந்த கர்பலாவில் நடந்த உயிர் தியாகத்துக்கு உலக சரித்திர சாதனைப் பட்டியல்களில், முதலிடத்தைத் தந்திருக்கின்றன. ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்புக்கள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார்கள். உலகின் போர்களங்களில் நிகழ்ந்த  பேச்சுக்களில் மிகச் சிறந்த பேச்சாக அன்னை பீபி ஸைனபின் பேச்சு இன்றும் கருதப்படுகிறது. இமாம் ஹ¬ஸைன் (ரழி) அவர்களின் இறுதி இரவில் கி.பி. 680 ஒக்டோபரில் (ஹிஜ்ரி 61 இல் முஹர்ரம் 10 ஆம் நாள் இரவு) நடந்த நிகழ்ச்சி இது:-

இதோ…!   கர்பலாப் பாலையில் பீபி ஜெயினப்; தன் கண்மணிகளான குழந்தைச் செலவங்களுக்கு தன் கனி மொழிகளைக் கூறும் காட்சி…….. பீபி ஜெயினப் தன் குழந்தைகளான அவுன்,  முஹம்மத் ஆகிய இருவரையும் தன்னருகே அழைத்தார். தன் மடியிலே அமர்த்தினார். தன்னோடு கொண்டுவந்த பட்டாடைகளை அவர்களுக்கு அணிவித்தார்.

அவுன் என்பவருக்கு வயது 8ம்,   முஹம்மத் என்பவருக்கு வயது 9ம் ஆகும். ஆனால், அவர்கள் ஆற்றல் மிகு செம்மல்கள்; நீதிக்குப் பலியாகும் வீரர்கள்; வாளுக்குப் பசியாற்றப்போகும் வள்ளல்களின் வாரிசுகள், (இப்றாஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) பரம்பரை தொட்டு வந்த வாரிசுகள்) வாய்மையின் சிகரங்கள்,  நேர்மையின் நினைவுச்சின்னங்கள், இளம் பருவம்; இனிய உருவம், பால் முகம் மாறாத, பருவச்சிட்டுக்கள். பாருலகப் பாதையில் இன்னும்  பார்க்க  வேண்டிய எத்தனையோ  இன்பங்களை இறைவனுக்கு தியாகம் செய்துவிட்டு உயிர்  துறக்கப்போகும்  உத்தம சிற்பங்கள் உலகங் காக்க  உதித்த உத்தம நபியின் உண்மை வாரிசுகள் , உயிர் துறக்கப்போகும்  உன்னதக்  காட்சி!    அதை  பெற்ற தாயே  அரங்கேற்றும் அற்புத அறபு  லீலைகள்! ஆண்டவனுக்காக  ஆவி துறக்கப்போகும் அறபுச்  செம்மல்கள்! “அன்னை மடியே சொர்க்கம்” என்று சொன்ன, அஹமது நபியின், சுகமறியாய் பருவங்கள். கொடியவனின் கொடிய வாளால் கொடியறுந்து  விழப்போகும் கொத்து மலர்கள்,  ‘தீன்’ கொடி நாட்டி, ஹூஸைனுக்கு உயிரையே  தரப்போகும் கொடை  வள்ளல்கள் , குழந்தைச்  செல்வங்கள் , அன்னையின் அன்புக் கரங்களின் அரவணைப்பில் சுகம் கண்டு வளர்ந்த அறியாய் பாலகர்கள், அடி பட்டும்  அறுபட்டும்  அறத்தை நிலை நாட்டப்போகும் அகோரக் காட்சிக்கு, அன்னை ஜெயினப் ஆறுதல் கூறப்போகும் அரும் நிகழ்ச்சி நெஞ்சிலே ஈரமுள்ள எவருக்கும் கண்ணீர் பீரிட்டு வெளியே வந்துவிடும்; அத்தனை சோதனையான நேரம் ………

எனவே, பிள்ளைகளை திடப்படுத்தமுன்   தன்னை  திடப்படுத்த எண்ணிய தாய்,  மெதுவாக பக்குவ  நிலையடைந்து – “எப்படி ஆரம்பிப்பதென்று”  புலம்பியபடியே  தன் குழந்தைகளுக்கு  அணிகலனிட்டு,  அலங்காரம்  செய்துவிட்டு  “இனி பாலகர்களைக் காணவா போகிறோம்?  என்று ஏங்கித் தவித்த  ஜெயினப், தந்தையையும் தாயையும் விட்டுவிட்டு, வீரப் போரில் விழுப்பம்  பெற்று விடுதலையடையப்போகும் பாலகர்களை, பாலூட்டி வளர்த்த அந்த பாலகர்களை பால் கொடுத்த மார்பு – பறிகொடுக்கத் தயங்கியது .  

தன்னையும் மீறி வந்த பெரும்துக்கத்தை  அடக்கிக் கொண்டு, தன் அன்புப் புதல்வர்களைக் தடவிக் கொடுத்தார்கள். அது  கண்ட இளவல் முஹம்மத் “ஏன் அம்மா இன்று எங்களை என்றும் இல்லாதவாறு அளவுக்கு மீறி உபசரிக்கிறீர்கள்? என்று தனது  கள்ளம் கபடமற்ற  கனி மொழியால் கேட்டபோது, அது  கேட்ட  ஜெயினப்  அவர்கள் “ஒன்றுமில்லை  மகனே!  உனது பாட்டனாரின்  கதை சொல்கிறேன் கேள்   மகனே!” என்று தனது அடைபட்ட  நாக்கை விடுபடச்  செய்து   தனது படபடப்பைக்  காட்டாது  பேசலானார்கள். தமயன், தன் தாய்   முகத்தை  தவிப்போடு  பார்த்தான். தான்  பெற்ற  செல்வத்தை  தாயும்  பார்த்தாள்.  பால்  கொடுத்த மார்பு பறி கொடுக்க தயங்கியது – பரிதவித்து  பேசலானார்.   

“என் அன்பு உதிரங்களே! உங்கள்  தந்தை வழிப்பாட்டனார்  ஜஃபர்  ( ரலி ) வீரம்  மிகுந்தவர்! போர் என்றால் புலி போல் பாய்பவர்! அவர்கள்  நம் நபி (ஸல்) அவர்களுக்கு  துணையாக  இருந்தவர். உயிரை  துரும்பாக  நினைத்தவர். நபிகள்  நாயகத்தின்  கொள்கைக்காக கொடி பிடித்து  கொலையுண்ட  கொள்கைக்  கோபுரம். அவர்  போர்களில்   நபிகளாரின் கொடியினை  தானே  தூக்கிப்  பிடித்துச்  செல்லும் பாக்கியம்  பெற்றவர். நமது  நாயகம்  அவர்களின்  அன்புக்குப் பாத்திரமான; உயிர் தோழர், உத்தம  சீலர், உன்னத  வீரர், ஒரு  போரில்  நபிகளாரின்  பச்சைக்  கொடியை  ஏந்திய வண்ணம்   போர் புரிந்து கொண்டிருந்தார்கள். எதிரிகள்  அவரின்  கையை வெட்டினார்கள். உடலைக்  கிழித்தார்கள்.  இருந்தும் ஏந்திய கொடியை கீழே விழாது  காப்பாற்றிக் கொண்டிருந்த அவரின் இரு கரங்களையும் எதிரிகள் வெட்டி விட்டனர். அவரின் ஆவியும் பிரிந்தது. நபிகளும் வெற்றி பெற்றார்கள். இஸ்லாமும் உயிர் பெற்றது. அவர்கள் இழந்த கைகளுக்கு ஈடாக தங்கக் கைகளைத் தருவதாக இறைவன்  கூறினான். எனவே, அவர் பொற்கைகள் பெறுவதற்கு சுவர்க்கலோகம் சென்று விட்டார். மீண்டும்  அவர் இங்கு வரமாட்டார். அவரைப்  போய்  நீங்கள்  பார்க்க வேண்டாமா???

என்ஆருயிர்  கண்மணிகளே!  அதற்காக  ஆண்டவன்  நாளை  உங்களுக்கு ஒரு சந்தற்பத்தைத் தந்திருக்கிறான். அதனை நீங்கள் சரியாக பயன்படுத்துவீர்களேயானால்  நிச்சயம் உங்கள் பாட்டனார்  ஜஃபரையும், நபிகள்  நாயகம் ( ஸல் ) அவர்களையும், என் அன்புத் தாய்  பாத்திமாவையும், என்  ஆருயிர்  தந்தை அலியையும்,  உங்கள்  தாய் வழிப்பாட்டனார்  அலியையும்  காண்பீர்கள். எனவே,  உங்கள் வயது பற்றி கவலைப்பட  வேண்டாம்! உங்கள் பரம்பரை பற்றி சிந்தியுங்கள் .

உன்னத கொள்கைகளுக்கு உயிரையே தருவது நமது பரம்பரைச் சொத்து மகனே! அதனை பாதுகாத்து பாருலகப்பாதை நடப்பது நமது கடமை மகனே! தீனுக்கு  உயிர்  தருவது  குழந்தைக்கு  பால் தருவது போல! எனவே, வீர  சிங்கங்களின் வாரிசுகளே! உங்கள் வீர இரத்தத்தை இஸ்லாத்துக்காக சிந்தி சிறப்புப் பெற்றால்தான் என் அன்பைப்  பெறுவீர்கள். உண்மையில் உங்கள் தாய்க்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் உங்கள் உயிரை மதியாது,  நாளை போரில் தாய்மாமன் ஹுசைனுக்கு துணையாக வாள் பிடியுங்கள், எதிரியின் உயிர் குடியுங்கள். உங்கள் உயிரையே  கொடுத்தாலும்  நான் மிக்க  மகிழ்ச்சியடைவேன். உலக சரித்திரத்தில் ஓர் உன்னத நிலையை அடைவீர்கள் .அதைத்தான் நானும் விரும்புகிறேன் .

உங்களை சுமந்த வயிற்றுக்கு, உங்கள் நன்றிக் கடனைக்காட்ட, நான் தரும் சந்தர்ப்பம் மகனே! அதை நீங்கள் சரியாக செய்து முடியுங்கள். பெற்ற வயிறு உற்ற பெருமையை நானும் பெறுவேன். மாநபியின் தீனைக்காக்க,  மகனை  இழந்த   மங்கைகளில், என்னையும்  ஒருத்தியாக்கிய   பெருமையை  நீங்கள் பெறுங்கள்.   என்  மரணத்துக்குப்  பின் என் தாய்  பாத்திமாவின்முன் என்னைத் தலை குனிய வைத்து  விடாதீர்கள்.  என் தந்தை அலியின் முன் என்னை  பரிதவிக்க  விட்டு  விடாதீர்கள் . நாளைய  நீதி நாளில் நல்லோர்மத்தியில்  நாணத்தோடு  நிற்கின்ற  அவல  நிலைக்கு  என்னை  ஆளாக்கி  விடாதீர்கள் . என் அன்பு செம்மல்களே! அறுபடப்போகும்  ஆடுகளை  அணிகலன்களால் ஆனந்தமூட்டும்  இந்த  அபலைப்  பெண்ணை  காத்தருளும்  கரங்களே! உங்கள் வாழ்வுச்  சரித்திரத்தை  உங்கள்  இரத்தத்தைச்  சிந்தி  எழுதிவிட்டுப்  போங்கள்  . நாளைய  உலகம் படித்துணரட்டும். நயவஞ்சகர்கள்  திருந்தி  வாழட்டும்.         இஸ்லாம் உயிர் பெற்று மலரட்டும். நலிந்த  தீன்  தலை நிமிர்ந்து நடக்கட்டும் . உங்களையும் எங்களையும்  வாயார  போற்றட்டும். அதற்கு  உங்கள்  கரங்களும், உயிர்களும்  தயாராகட்டும். என் பாட்டனாரின் தீனைக் காக்க உன் பாட்டனாரின் வீரத்தைக் காட்டு மகனே! .உன் பாட்டனார் அலியின்  வாளைக் கண்டு  அகிலமே அலர்ந்தது  மகனே! அந்த அரிய வீரரின் மகளின் வயிற்றில் பிறந்த  வீர  சிங்கங்களே ! வீறு கொண்டு எழுந்து, விழுப்பம் பெற்று வீர  சுவர்க்கம் அடைந்து, விலை மதிப்பற்ற  விண்ணுலகில் வீர இளவல்களாக  திகழுங்கள்மகனே!. எங்கள் பரம்பரை மானத்தை  உங்கள் பச்சைக் கரங்களில் தந்து, உங்கள் கால்களை பிடித்து கதருகிறேன் மகனே! என் தந்தையின் வீர சரித்திரத்தை காத்துத் தாருங்கள். என் கண்மணிகளே! உங்களை பெற்றதாய் மார்தட்டி வாழ,  மரணத்தை  தழுவியாவது  எங்கள்  தீனையும் மானத்தையும் காத்து தாருங்கள் மகனே!

வாழ வேண்டிய வயதிலே வஞ்சகரை எதிர்த்து வாள்  பிடிக்கும்  உங்கள் வாலிப  வீரத்தை  எண்ணியெண்ணி இஸ்லாமிய பெண்கள் இறும்பூரெய்திடட்டும். என் அன்பு பிள்ளைகளே!  உங்கள் தந்தை வழிப்  பாட்டனாரின் உயிர் குடித்த, அபூ சுப்யானின் வாரிசுகளை பலியெடுக்க நீங்கள் தயாராகுங்கள். உங்கள் தாய்  வழிப்  பாட்டனாராகிய  அலி (ரலி) ஆண்டவனைத்  தொழும்போது அடிபட்டு மாண்டார். அவரை அடித்துக்கொன்ற அரக்கர்களின் உயிரை கிழித்தெறிய உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். உங்களை பெற்ற  நெஞ்சிலே பால்வாருங்கள் .கரங்களிலே வாள்   பிடியுங்கள் .

பால் மனம் மாறாத பாலகர்களும் தீன் கொடி காக்க உயிர் துறந்தார்கள் என்ற வீர காவியத்துக்கு நீங்கள் உன்னத சான்றுகளாக விளங்குங்கள். விளையாடும் பருவத்தில், வில்லம்பு ஏந்தி, விண்ணுலகம் அடைந்த வீர கதைக்கு நீங்கள் வீர புருஷர்களாக  விளங்குங்கள். இதை வருங்கால வாலிபர்களும்  வயோதிபர்களும்  கண்டு, அவர்களும் தங்கள் தியாக கதைக்கு தங்களை தயார் படுத்திக்  கொண்டால்தான் அல்லாஹ்வின் நெறி அகில உலகிலும்  நிலைத்து நிற்கும். அதற்கு உங்கள் மரணம் சான்றாக நிற்கட்டும். அது கண்டு நபிகளாரின் மனம் மகிழட்டும். இது கண்ட பின்  என் மனமும் குளிரட்டும். அதனால் ஆகட்டும் மகனே….  புறப்படுங்கள் மகனே…..

இஸ்லாம் என்ற மார்க்கம்  வந்திராவிடின்,  என்போன்ற  பல தாய்மார்கள்  வாழ்விழந்து, தவித்து, துடித்து செத்திருப்பார்கள் மகனே! ஆமாம், அறபு மக்கள் அரக்கர்களை விட கொடியவர்கள்! அல்லல் பலபட்டு ஆயிரம் இடர்பாடுகளுக்கு மத்தியில் மேல்மூச்சு,  கீழ்மூச்சு வாங்கி,  பத்துமாத பளுவை சுமந்து, பெற்ற பிள்ளை பெண் பிள்ளையாக இருந்தால் உடனே பெற்றவள் கதறக்கதற  வெட்டி வீசும்  வெறி பிடித்த மக்களை  இஸ்லாத்தின் நெறி பிடித்து, கொடி பிடித்து காப்பாற்றிய  பெருமை  பெருமானார் நாயகம் அவர்களை   சாரும்  மகனே! அன்றைய ஆரணங்களுக்கு – பெண்களுக்கு  ஆபத்து  மகனே! அந்த அரும்பெரும்  தாய்க்குலத்தை  காத்தவர் மஹ்மூத்  நபியென்னும் எனது  பாட்டனார் .

விதவையின் விரிந்த கூந்தலிலே  மீண்டும் மலர் வைத்து மகுடம் தரிக்க வைத்த பெருமை – உலகில் எவரும் இதுவரை  செய்யாத  சாதனை! விதவைகளை விலை மதிக்கச் செய்தது  இஸ்லாம்! அக்கிரமத்தை அழித்து  அன்பைத் தூவியது  இஸ்லாம்! அநியாயத்தை  ஒழித்து  அகிலத்தையே  காத்தது இஸ்லாம். உலுத்தர்களை  மாற்றி உத்தமராக்கியது இஸ்லாம்! குடிகாரனைக்கூட குடித்தனக்காரனாக்கியது  இஸ்லாம். கொலைகாரர்களைக்கூட,  கொடைவள்ளலாக்கியது  இஸ்லாம் .அநீதியை  அழித்து  நீதியை நிலை நாட்டியது இஸ்லாம். கொள்ளைக்காரர்களைக் கூட  வெள்ளை மனமுடையதாக்கியது   இஸ்லாம்.  ஏழைக்கு கூட ஏற்றமிகு  தானத்தை  தந்தது   இஸ்லாம் .

இந்த  இஸ்லாத்தை உருவாக்க என் போன்ற எத்தனையோ  தாய்மார்களின்  வாழ்வு அறுந்தது  மகனே….  எத்தனையோ  தாய்மார்களின்  உதிரத்தில்  வரைந்த உன்னத காப்பியம்!   இது உலகில் இல்லாவிடில்  என்னைப்போன்ற தாய்மார்கள்  வாழ்விழந்து தவித்திருப்பார்கள் ……        

எனவே, உங்கள் தாய் மீது பாசமிருந்தால்! நான் கொடுத்த பால் உன் உடம்பிலே ஓடியிருந்தால்,  என் பால் கொடுத்த மார்பிலே நீ சுகம் கண்டு வளர்ந்திருந்தால் அதற்கு நீ நன்றிக்கடன் தீர் மகனே! அதை நீ நாளை போர் களத்தில்காட்டி, இஸ்லாத்தைக் காத்து  என்போன்ற  தாய்க்  குலத்துக்கு ஏற்படப்போகும் இன்னல்களை காப்பாற்றிதாருங்கள் மகனே …..  இஸ்லாத்தை அழிக்கக்   கூடியிருக்கும்  எதிரிகளைத் துவம்சம் செய்து, வாகைச்சூடி வந்து  எனக்கும் மாலை போட்டு  மகிழுங்கள், உங்கள்  உதிரக்  கரங்களால்  இஸ்லாமிய மறுமலர்ச்சி வளர்ச்சி பெறட்டும். உங்கள் உயிர்கள் மேல் அதன் அடித்தளம் அமையட்டும். நிகரற்ற வீர காவியத்துக்கு  நீங்கள் நினைவுச் சின்னங்களாக  மாறுங்கள். பெண்ணாக நான் பிறந்து விட்டேன் மகனே.. அதனால்  பொன்னான இந்நேரத்தில்  பொறுப்பான கடமைகளை உங்கள் பிஞ்சுக் கரங்களிலே சுமத்துகிறேன். என்போன்ற  மங்கைகளுக்கு மறுவாழ்வு தந்த இஸ்லாமிய நெறிக்கு என் நன்றிக்கடன் செலுத்த  துடிக்கிறேன். அதை  தூக்க முடியாத உங்கள் தோள்களிலே  சுமத்துகிறேன். உங்கள்  வாள்களை நம்புகிறேன். வாழ்த்தி அனுப்புகிறேன். வாகை  சூடி வாருங்கள் வள்ளல்களே! ….;

சுவர்க்கம்  நமது  சொந்த வீடு மகனே! இவ்வுலகம் நாம் வந்த  வீடு மகனே …. நிலையற்ற இந்த வாழ்வு நமக்கு தேவையில்லை. இந்த நிழலில்கூட நீங்கள்  நிற்க வேண்டாம். அதனால், நிலையான உலகுக்கு உங்களைமகிழ்வோடு அனுப்புகிறேன். என் மனதுக்கு இதமாக நடந்து நான் ஊட்டிய பாலுக்கு ஈட்டுத்தொகை  கொடுத்து  உங்கள் கடன் தீருங்கள் .

“இது உங்கள் தாய் மீது ஆணை!”  செய்வீர்களா?  என் கமணிகளே என்று கண்ணீர் அரும்பக்  கேட்டுவிட்டு சற்று கண் மூடி மூச்சு வாங்கினார் பீபி ஜெயினப். தொண்டை  அடைத்தது. நெஞ்சம்  கனத்தது, உதிரம்  கொதித்தது, உலகமே  அழுதது,  எந்தத்  தாயும் செய்ய முடியாத இறைவனின் சோதனைக்கு  தியாக சாதனைக்கு  தன்னை தயார்  செய்து விட்டு தாகத்தின் தவிப்பில் நின்ற தாய் தன் கடமையை இறைவனுக்காக  ஆற்றியதாய் வீரகதை பேசிவிட்டு தன்னை மறந்து மயக்கமுற்றார். மீண்டும்  எழுந்தபோது தனது இரண்டு மக்களின் ஜனாஸாக்களைதான் கண்டார! (இன்னாஹி  லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிஊன் )

வீரத்தியாகிகள் மறைந்தாலும் வீர காவியங்கள் மறைவதில்லை”

“ஒவ்வொரு கர்பலாவுக்குப் பிறகும் இஸ்லாம் புத்துயிர் பெறுகிறது”

-மகா கவி அல்லாமா இக்பால்-

எஸ்.சுபைர்தீன்

செயலாளர் நாயகம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

                                                                                              

By

Related Post