தென்னமெரிக்கா மற்றும் பல நாடுகளில், சீகா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால எச்சரிக்கை விடுத்தார்.
சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கர்ப்பிணிப் பெண்ணொருவர், சீகா வைரஸால்
பாதிக்கப்படுவாராயின், அது அவருடைய வயிற்றிலுள்ள சிசுவின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும். இதனால், குறித்த சிசுவுக்கு, நரம்பியல் சம்பந்தமான நோய்கள், பிறவிக்குறைபாடு போன்றன ஏற்படக்கூடும்’ என்றார்.
‘எனவே, பிரசவ காலம் முடியும்வரை, வெளிநாடுகளுக்குச் செல்வதை, கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். மேலும், சீகா தொற்றுக்குள்ளானவரின் இரத்த மாதிரி, ஏனைய உடற்றிரவங்களாகிய சிறுநீர், உமிழ்நீர், சுக்கிலத் திரவம் என்பவறை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம், இந்நோய்கிருமிகளைக் கண்டறியலாம்’ எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.