புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கௌரவமாக பெற்றுக்கொடுக்க, என்ன சவால்கள் வந்தாலும் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடத் தயாராக இருப்பதாக தராசுக் கூட்டணி வேட்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.
கற்பிட்டியில் இன்று பிற்பகல் (16) தராசுக் கூட்டணி வேட்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில், முகநூல் ஊடாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பில் விளக்கமளித்த அவர் கூறியதாவது,
“கற்பிட்டியில் எமது காரியாலயத்தை திறப்பதற்காக ஆதரவாளர்களோடு வந்த போது, நாங்கள் ஊர்வலம் செல்வதாகக் கூறி என்னையும், ஆதரவாளர்களையும் கைது செய்ய முற்பட்டார்கள். இதன்மூலம், எமது குரலை நசுக்கப் பார்க்கிறார்கள். இதற்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எவ்வாறான சவால்கள் வந்தாலும், எமது சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகப் போராடத் தயாராக இருக்கிறோம்.
நாம் கூக்குரல் போடவில்லை. கோஷம் எழுப்பவில்லை. அமைதியாகவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, எமது வாகனங்களில் பயணித்தோம். ஆனால், நாங்கள் பேரணி வருவதாகக் கூறி, எமது தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.
கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொரோனா சட்டத்தை மதிக்காமல் இங்கு வருகை தந்து, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்றும் பார்க்காமல், ஒரு சண்டியர் போல செயற்பட்டார்.
கற்பிட்டி பொலிஸார் நடந்துகொண்ட விதம் மிகவும் வேதனையளிக்கிறது. ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு சட்டம். எங்களுக்கு வேறு ஒரு சட்டமா? என கேட்க விரும்புகிறேன்.
அத்துடன், சிறுபான்மை மக்களின் விடயத்தில், தேர்தல் ஆணைக்குழு ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.
எனவே, எமக்கு எதிராக பல சதிகள் நடக்கின்றன. இந்த விடயத்தில் புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் தெளிவுபெற வேண்டும். என்ன பிரச்சினை வந்தாலும், எமது சிறுபான்மை மக்களின் உரிமைகளை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் பேவதில்லை. உரிமைகளை பெறுவதற்காக வீதியில் இறங்கிப் போராடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.