அமைச்சர் சம்பிக்க ரணவக்க இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அடிப்படை வாதிகளாகச் சித்திரித்து எழுதிய அல்–ஜிஹாத் அல்–கைதா எனும் புத்தகத்தை கிழித்து தீயிட்டு கொளுத்திய முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அப்புத்தகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடைசெய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
நேற்றுக்காலை பம்பலப்பிட்டியிலுள்ள பர்ல் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஸ்வர் குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்தார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க எழுதியுள்ள அல்–ஜிஹாத், அல்–கைதா என்ற புத்தகத்தில் இலங்கையில் குர்ஆன் மதரசாக்களும் அரபு கல்லூரிகளும் அஹதிய்யா பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களின் இஸ்லாமிய பீடங்களும் இஸ்லாமிய தீவிர வாதத்தை போதிப்பதாகவும் இவ் விடயங்களிலிருந்து தான் முஸ்லிம் அடிப்படை வாதம் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, தௌஹீத் ஜமாஅத் போன்ற இஸ்லாமிய நிறுவனங்கள் அடிப்படை வாதத்திற்கு துணைபோவதாகவும் கூறியுள்ளார். இவ்வியக்கங்கள் சமாதானத்தையும், நல்லொழுக்கத்தையுமே போதிக்கின்றன என்பதை சம்பிக்க அறியாதிருப்பது கவலைக்குரியது. குர்ஆன் பாடசாலைகள் உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர் இன்றைய அமைச்சர் கபீர்ஹாஷிமின் அப்பா இப்ராஹிம் என்பவராவார். குர்ஆன் மதரஸாக்களைப் பற்றிய தவறான கருத்துக்களை தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க இப்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். இந்நிலையில் இது பற்றி அமைச்சர் கபீர் ஹாஷிம் என்ன சொல்கிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
இதேவேளை ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் மறைந்த தலைவர் அஷ்ரபின் ஏற்பாட்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அங்கு இஸ்லாமிய பிரிவு இயங்குகிறது என்றாலும் அங்கு சிங்கள, தமிழ் மாணவர்களும் உயர்கல்வி பெறுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது அமைச்சர் சம்பிக்கவிடம் கூட்டு சேர்ந்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதற்கு என்ன சொல்கிறார். பல்கலைக்கழக இஸ்லாமிய பீடங்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறதா? சம்பிக்கவின் கூற்றை அவர் ஏற்றுக் கொள்கிறாரா என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்? கலிமா சொன்ன முஸ்லிம்கள் இவ்வாறானவர்கள் ஒற்றிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.