கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடிப் படையினரை கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சு பெற்றுக் கொண்டமைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வும், பொதுக் கூட்டமும் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக கல்குடாத் தொகுதியில் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து போதை ஒழிப்பு பிரகடனமாக கல்குடாவை வளப்படுத்தி நூறு வீதம் போதை இல்லாத பிரதேசமாக மாற்றுவதற்கான சத்தியத்தை எல்லோரும் செய்து கொள்ள வேண்டும்.
இதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்து செய்ய இருக்கின்றோம். இப்போது விசேட காலத்தில் விசேட அதிரடிப் படையினரை கொண்டு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். எதிர்காலத்தில் கடினமாகவும், அசிங்கமாகவும் இருக்கும் அதற்காக என்னை திட்ட வரக்கூடாது. போதையோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் யாரும் என்னோடு பேச முடியாது. இதனை நீங்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அதிரடியாக சில நடவடிக்கைகளை நாங்கள் செய்ய இருக்கின்றோம்.
கல்குடாத் தொகுதியில் முப்பதாயிரம் ஏக்கர் விவசாயம் செய்யும் தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் நன்மை பெறும் வகையில் இரண்டு மாதங்களில் நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் திறந்து வைப்பதற்காக நான் அமைச்சு பதவியை ஏற்றதும் இதற்கான கையொப்பத்தினை இட்டு உங்கள் முன் பேசுகின்றேன்.
கல்குடாத் தொகுதியில் முப்பதாயிரம் ஏக்கர் விவசாய செய்யும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் இதனால் நன்மைபெறப் போகின்றது. இரண்டாவது கட்டமாக தண்ணீர் பிரச்சனைக்கான முனைப்பையும் எடுப்பேன். அடுத்த கட்டமாக எமது பகுதியில் பொருளாதாரத்தை தருகின்ற மீன்பிடி பிரச்சனையும் தீர்த்து வைக்கப்படும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இன்னுமொரு அரசியல் தளம்பல் இருக்கின்றது. அதனை நான் இப்போது விளக்கமாக சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம் வரவிருக்கின்ற அரசியல் தளம்பலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதான இடமாக வகிபாகம் வகித்து மீண்டும் நிலைத்து நிறுத்தக் கூடிய நிலவரத்தை இறைவன் தருவான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார்.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற இதன்போது ஊர்வலம் ரிதிதென்ன இலங்கை போக்குவரத்து சாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டு ஜயந்தியாய வழியாக ஓட்டமாவடியை வந்தடைந்து பின்னர் ஓட்டமாவடி மீன் சந்தை முன்பாக இருந்து திறந்த வாகன பவனியில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகம் வரை பிரதேச முக்கியஸ்தர்களால் அழைத்து வரப்பட்டார்.
இங்கு பிரதேச முக்கியஸ்தர்களாலும், பிரதேச அமைப்புக்களாலும் இராஜாங்க அமைச்சர் கௌரவிக்கப்பட்டதுடன், இராஜாங்க அமைச்சரின் ஆசானும் மூத்த கல்விமானுமாகிய ஏ.எம்.ஏ.காதர் கௌரவிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கு விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌசாத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் எஸ்.எம்.எம்.முஸர்ரப், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.