Breaking
Thu. Jan 16th, 2025

கல்குடாவின் பிரதிநிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது நீண்ட பரம்பரைக்கு கால்கோளாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும் எனவும் இதற்காக கடந்த பொதுத்தேர்தலை விட இரட்டிப்பு மடங்கு செய்றபடவேண்டும் எனவும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பிணர்களுடனான கலந்துரையாடல் நேற்று 20.06.2020 இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியதாவது

“கடந்த வருடம் சஹ்ரானுடைய குண்டு வெடிப்பின் பின்னர், கிழக்கு கட்டளைத்த தளபதியிடம் தன்னை பணயம்வைத்து, பிற பிரதேசங்களை போன்று பள்ளிவாயல்களுக்குள் நாய்களை கொண்டு வராமலும் குர்ஆன்கள் வீசப்படாமலும் பர்தாக்களையும், பள்ளிவாயல்களையும், உலமாக்களையும், குர்ஆன்களையும் பாதுகாக்க முடிந்தது என்றால், அதற்கு இறைவனின் உதவியுடன், கடந்த பொதுத்தேர்தலில் இந்த மக்கள் எனக்கு இட்ட புள்ளடிகளால் கிடைத்த அதிகாரத்தினாலே இயலுமானது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிரணியினர் அமீர் அலியால் ஒரு அங்குலம் காணியேனும் மீட்கப்பட்டதா? என்று கேள்வி கேட்பவர்கள், கடந்த காலத்தில் எம்மால் பாராளுமன்றத்தில் காணி பிரச்சினைகள் சம்பந்தமாக ஆற்றப்பட்ட விவாதங்களை அறியாதவர்களாகவே இன்னும் இருக்கின்றார்கள். அவர்களின் காலத்திலேயே தான் சகல காணிகளும் இழக்கப்பட்டதென்பது கூடத்  தெரியாமல், சிறு பிள்ளைகளாக இருக்கின்றார்கள். காணி விடயங்கள் சம்பந்தமாக இதுவரை புத்திஜீவிகள் அரசியல் பிரமுகர்களுடன் நடாத்தப்பட்டிருக்கின்ற 57 கூட்டங்களில் ஒன்றிலும் பங்குபெறாதவர்கள், இப்போது எம்மை நோக்கி விரலை நீட்டுவது என்பது நகைப்புக்குரிய விடயம்.

கடந்த முறை கணேசமூர்த்தி இறுதி நேரத்தில் இணைந்து வெற்றிக்கு வித்திட்டது போல, இம்முறை தேர்தல் களத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி இணைந்துகொண்டதன் மூலம், மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸவின் டெலிபோன் சின்னத்திற்கு ஆசனம் உறுதியாகி இருக்கின்றது. வாக்குறுதியளித்தபடி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும் தேசியபட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பார் இன்ஷாஅல்லாஹ்.

இந்தக் கலந்துரையாடலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பிணர்களான நௌபர், ஜௌபர் மற்றும் முன்னாள் தவிசாளர் ஹமீட், முன்னாள் பிரதேச சபை உறுப்பிணர் அல்பதா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Post