அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியாவின் சிபாரிசின் பேரில், கொத்தாந்தீவு கட்சி அமைப்பாளர்களான நஸீர் மற்றும் செயலாளர் நாஸிம் ஆகியோரின் வேண்டுதலுக்கமைய, கொத்தாந்தீவில் நகர மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஆப்தீன் எஹியா கூறியதாவது,
கல்பிட்டி பிரதேசத்திலே முதன்முறையாக இவ்வாறானதொரு நகர மண்டபத்தை, அரச நிதியில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தந்த மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு, கட்சியின் அமைப்பாளர் என்ற வகையில் முதலில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
கடந்த காலங்களில் இவ்வாறானதொரு மண்டபத்தை கடையாமோட்டை பகுதியில் அமைப்பதற்கு, நாம் பல முயற்சிகளை மேற்கொண்டு, அதற்கான அடிக்கல்லை நாட்டிய போதிலும் கூட, அப்போது நான் சார்ந்திருந்த தலைமைகளால் அந்த முயற்சிகள் தட்டிக்கழிக்கப்பட்டன.
ஆகையால், இந்த நகர மண்டபத்தை அமைப்பதற்கான திட்டங்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நாம் தெரிவித்த போது, அவர் அதனை ஏற்றுக்கொண்டு நகர மண்டபம் அமைப்பதற்குத் தேவையான 05 கோடி 40 இலட்சம் ரூபா நிதியை பெற்றுத் தருவதாக வாக்களித்தார். அத்துடன், அதன் ஆரம்ப கட்ட பணிகளுக்காக இரண்டரை கோடி ரூபா நிதியை உடனடியாக ஒதுக்கியுள்ளார்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். இதன் மூலம் இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் கனவு நனவாகியுள்ளதுடன், தங்களின் பொது நிகழ்வுகளை நடாத்த ஒரு நிரந்தர இடம் கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
பல நூறு வருடங்களின் பின், கல்பிட்டி மக்கள் வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பார்களேயானால், இந்த மண்டபமும் அமைச்சர் ரிஷாட்டின் பெயரை சாட்சி சொல்லும். எனவே, கல்பிட்டி வாழ் மக்கள் சார்பில் அமைச்சருக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், மக்கள் காங்கிரஸ் தலைவர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சேவை கல்பிட்டி பிரதேச மக்களுக்கு தொடர்ந்தும் தேவை என அவர் கூறினார்.