Breaking
Sat. Nov 16th, 2024

சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபையினைக் கோரி கல்முனை பிரதேசத்துடன் கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த போதும், தற்போதைய நிலையில் கல்முனையைக் காப்பாற்றுவதற்காக, முஸ்லிம்கள் என்கிற வகையில் கல்முனை மக்களுடன் சாய்ந்தமருது மக்கள் கைகோர்த்திருப்பதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலக்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

இன ரீதியானதும், நிலத்தொடர்பற்றதுமான பிரதேச செயலகத்தை வழங்கக் கூடாது எனக் கோரி, கல்முனையில் முஸ்லிம் மக்கள் நடத்திவரும் சத்தியாக்கிரக நடவடிக்கையில், இன்று வெள்ளிக்கிழமை காலை கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருது மண்ணைச் சேர்ந்தவன் என்கிற வகையில், கல்முனையைக் காப்பாற்றுவதற்காக, இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நானும் எனது பிரதேச மக்களும் கைகோர்த்துள்ளோம்.

முஸ்லிம்களை கொன்று குவித்து, தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா அம்மான், மட்டக்களப்பிலிருந்து வந்து, முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறிச் செல்ல முடியுமென்றால், கல்முனையைக் காப்பாற்றுவதற்காக இங்குள்ள முஸ்லிம் மக்கள் ஏன் ஒற்றுமைப்படக் கூடாது என்று கேட்கிறேன்.

பல கட்சிகள் இணைந்து அரசியலில் தமிழ் தேசிக் கூட்டமைப்பு என்று ஒற்றுமைப்பட்டதைப் போல், முஸ்லிம் கட்சிகளும் இணைந்து, முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்

உள்ளுரிலும், சர்வதேசத்திலும் உள்ள – முஸ்லிம்களுக்கு எதிராக சக்திகள்தான், உப பிரதேச செயலகத்தை கோரும் தமிழர் தரப்பின் பின்னணியில் உள்ளன என்பதுதான் எனது பார்வையாகும் ” என்றார்.

Related Post