Breaking
Sun. Nov 17th, 2024

-ஊடகப்பிரிவு-

பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் கல்முனை மாநகரத்தை, வினை திறன் உள்ளவர்களின் கைகளில் கொடுத்து அழகுற பார்க்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, கல்முனை மாநகரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் மனம் உவந்து தருவார்கள் என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்தார்.

இவர் கடந்த வாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்தார். வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை மாநகர சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படுத்துகின்ற வேலைத்திட்டம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதே நேரம் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிறுத்தி, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் அனுசரணையுடன் சாய்ந்தமருதில் இருந்து ஒரு சுயேச்சை குழு போட்டியிடுகின்றது. இவை தொடர்பாக கருத்து கூறியபோதே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாது,

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை கொடுப்பார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஹாரிஸ் ஆகியோர் சாய்ந்தமருது மக்களுக்கு வாக்குறுதி வழங்கி வாக்குகள் பெற்றார்கள். ஆகவேதான் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை தாருங்கள் என்று இவர்கள் இருவரையும் சுட்டி காட்டி சாய்ந்தமருது மக்களின் பிரதிநிதிகள் கேட்கின்றார்கள்.

அதாவுல்லா மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பதவி வகித்தபோது கல்முனையை நான்காகப் பிரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இதை தடுத்து நிறுத்திய சிறுமை ரவூப் ஹக்கீம், ஹாரிஸ் ஆகிய இருவரையுமே சேரும்.

கடந்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்முனையில் சந்தாங்கேணியில் நடத்திய பொதுக் கூட்டத்தில் வைத்து, சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவார் என்று தெரிவித்தார். இந்நிலையில் அவரை சந்தித்து அவ்வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று கேட்டபோது கல்முனையை பிரமாண்ட நகரமாக கட்டி எழுப்பி அபிவிருத்தி செய்வது அவரின் கனவாக இருக்கின்றபோது, எவ்விதம் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையை வழங்க முடியும்? என்று பதிலுக்கு வினவினார். அப்படியாயின் எதற்கு அவ்விதம் பகிரங்க வாக்குறுதி வழங்கினீர்கள்? என்று கேட்டபோது அவ்வாறு பேச வேண்டும் என்று ரவூப் ஹக்கீம்தான் எழுதி தந்திருந்தார் என்று சொன்னார். அப்போது இல்லை, இல்லை, ஹாரிஸ் சொல்லித்தான் அவ்விதம் செய்ய வேண்டி நேர்ந்தது என்று ரவூப் ஹக்கீம் சொன்னார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் வைத்திருக்கின்ற நெருக்கத்தின் மூலமாக கல்முனையை நான்காக பிரித்து கொடுங்கள் என்று நான் ஹக்கீமிடம் பல சந்தர்ப்பங்களில் எடுத்து சொல்லி உள்ளேன். இல்லையேல் காலம் காலமாக சாய்ந்தமருதுக்கும், கல்முனைக்கும் இடையில் நின்று நிலவி வருகின்ற நெருக்கமான உறவு பிணைப்புகளை சிதைத்து, பிரிவினையை விதைத்து இரு ஊர்களுக்கும் இடையில் வரலாற்று பகைமை ஏற்பட்டு விட காரணமாகி விடுவீர்கள் என்று நான் அவரை எச்சரிக்கவும் செய்தேன், ஆனால் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிட்டன.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உண்மையில் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை வழங்க தயாராகவே உள்ளார். கல்முனையை நான்காக பிரிப்பதற்கான ஆணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து பெற்று வாருங்கள் என்று ரவூப் ஹக்கீம், ஹாரிஸ் ஆகியோரை பல தடவைகள் நேரில் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள்தான் செயலற்றவர்களாக உள்ளனர்.

எவை எப்படி இருந்தாலும் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும். அப்படி கல்முனை நான்காக பிரிக்கப்படுகின்றபோது தனியான பிரதேச சபை சாய்ந்தமருதுக்கு கிடைக்கும்.

பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் கல்முனை மாநகரத்தை வினை திறன் உள்ளவர்களின் கைகளில் கொடுத்து அழகுற பார்க்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து கல்முனை மாநகரத்தை எமது கட்சியிடம் மனம் உவந்து தருவார்கள் என்பதில் பரிபூரண நம்பிக்கை எமக்கு உள்ளது.

Related Post